Saturday, November 16, 2013

வெள்ளைக் கிழவியும், கூனற் கிழவனும்



அது ஒரு அழகிய மாலைப்பொழுது. மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் பொழிந்த மழையின் பின்னே எட்டிப் பார்க்கும் பொன்னிற வெயிலில் தெறித்த ஓரிரு மழைத்துளிகள் ஆங்காங்கே வைரங்களாக ஒளி வீசித் தெறித்து விழுந்தன. 

இயந்திரம் போல் ஓடிகொண்டிருக்கும் மனிதர்களும் அவர்களின் அர்த்தமற்ற தேடல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதன் உணர்வுகளற்ற இயந்திரமாக தொடர்ந்தும் ஓடுகின்றான். உணர்வுகள் மரித்துப் போன நிலையிலும் கூட தொடர்ந்து ஓட்டத்தை நிறுத்தாமல் ஓடுகின்றான். அவன் கடந்து வந்த பாதையை வெறும் சடப்பொருட்கள் நிரப்பியிருந்தன. ஓடிக்கொண்டிருப்பவன் ஓட்டத்தை நிறுத்தும் போது அவன் எதிபார்ப்பவை எட்டாக்கனியாய்ப் போய்விடுகின்றன . அன்பு, பாசம், காதலுக்காக ஏங்கும் போது அவன் யாருமற்ற வனாந்தரத்தில் தனித்திருப்பான். மூப்பின் போதே மனிதன் இதனை உணர்கிறான்.

செல்லத்துரையும், சிவமணியும் இந்த இயந்திர உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் காதலுடன் கழித்தவர்கள். முதுமையின் முழுப்பரிமாணத்தில் தொடர்கிறது அவர்களது வாழ்க்கை. 

அந்த இயந்திரத் தெருவின் மூன்றாவது வீட்டின் விறாந்தையில் அமர்ந்து கொண்டு ஓய்ந்து விட்ட மழையின் பின்னே தெறித்து விழும் துளிகளை இரசித்துக் கொண்டிருந்தனர். 

செல்லத்துரை ஓர் உபாத்தியாயராகக் கடமையாற்றி இளைப்பாறியவர். வெள்ளை வேஷ்டி, நஷனல் என அந்தக் காலத்தில் உபாத்தியாயர்கள் அணியும் உடையை மிடுக்குடன் அணிந்தவர். அவரது கம்பீரமான உடல்வாகுவும், நிமிர்ந்த, நேர்த்தியான நடையும், சிவமணியைப் பெருமிதம் கொள்ளச் செய்தவை. 

இப்போது மூப்பின் சுவடுகள் தாங்கியவராய் அமர்ந்திருந்தார். பழுத்த மாநிறத்தோல் தளர்ந்து ஊசலாடிக்கொண்டிருந்தது. சுருங்கிய கண்களின் மேல் கறுப்பு வளையங்களையுடைய கண்ணாடியை அணிந்திருந்தார். கூனிய தோளிலிருந்த செந்நிற சால்வையை எடுத்து மற்றைய தோளுக்கு மாற்றிக்கொண்டார். அவருக்கு அருகிலிருந்த மூக்குத்தூள்ப் பேணியை மெதுவாக எடுத்து, பெருவிரலாலும் சுண்டு விரலாலும் ஒரு துளியை எடுத்து, தலையை சரித்து மூக்கிற்க்குள்ப் போட்டுக்கொண்டார் . தளர்ந்த மூச்சை ஒருமுறை இழுத்தவண்ணம் சிவமணியை நோக்கினார்.

சிவமணி மழையை விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சேலைத்தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டாள் அந்த வெள்ளைக் கிழவி. பால் நிற நெற்றியில் அவள் வைத்திருந்த குங்குமம் மினுங்கியது. செல்லத்துரையை விட பத்து வயது குறைந்தவளாயினும் நரையும், கூனலும், தள்ளாடலும் எனக் கணவனைப் போலவே காட்சியளித்தாள். இந்த வெள்ளைக் கிழவி ஒரு காலத்தில் பேரழகியாக இருந்திருப்பாள் எனப் பார்ப்போரை ஊகிக்க வைக்கும் ஒரு அழகிய வதனி சிவமணி.

"சின்னவன் போன் பண்ணிணவனோ?" கறுப்புக் கண்ணாடியை சரி செய்தவண்ணம் செல்லத்துரை சிவமணியைக் கேட்டார்.

சிவமணி ஏமாற்றப் பெருமூச்செறிந்தவண்ணம் கணவனை நோக்கினாள்.

"இல்லை ஐயா, அவன் போன கிழமை கதைக்கேக்க சரியான வேலை எண்டு சொன்னவன்.பாவம் களைப்பாத்தான் கதச்சவன்.இந்தக்கிழமை ஏதோ அலுவலா எங்கேயோ போறானாம்.”

கணவனிடம் எதையும் மறைக்காமல்க் கூறும் சிவமணி அடுக்கடுக்காய்ப் பொய் சொன்னாள். மகன்களை விட்டுக்கொடுக்காத தாய்மாரில் தானும் ஒருத்தி என நிரூபித்தாள். 

இந்த ஐம்பது வருட திருமண வாழ்க்கையில் மனைவியை நன்கு அறிந்தவர் செல்லத்துரை. அவள் கூறுவது பொய் என நொடியில் அறிந்து கொண்டார். இலேசாகப் புன்னகைத்துவிட்டு மீண்டும் சிவமணியைக் கனிந்த காதலுடன் நோக்கினார். 

*

சீனியர் ஸ்கூல் சேட்டிவிக்கேற் பரீட்சையில் சித்தியடைந்து தன்னுடைய 20 ஆவது வயதில் உபாத்தியாயராகக் கடமை ஏற்றார் செல்லத்துரை. அந்தக் காலத்திலேயே முற்போக்கு சிந்தனையாளர் எனப் பொதுவாக அறியப்பட்டவர். பாடசாலை, வீடு எனத் தொடர்ந்த அவரது வாழ்க்கையில் சிவமணி நுழைந்த கதை சுவாரஷ்யமானது. 

வழக்கமாகப் பணி முடித்துத் திரும்பிக் கொண்டிருந்த செல்லத்துரை ஒரு வீட்டின் முன் அசையாது நின்றுவிட்டார். வீட்டிற்கு வெளியே சிவமணி ஊறுகாய்க்காக வெட்டி உப்பிடப்பட்ட தேசிக்காயைக் காயவைத்துக் கொண்டிருந்தாள். 

சிவமணியைப் பார்த்தவுடன் செல்லத்துரைக்குப் பொறி தட்டியது. அந்த அழகிய கண்களைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது செல்லதுரைக்கு. ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு மேலிட செல்லத்துரை அவ்விடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்றார். தன்னை யாரோ அவதானிப்பதை அறிந்துகொண்ட சிவமணி விறுக்கென்று வீட்டிற்குள் சென்று விட்டாள். 

தொடர்ந்த நாட்களில் செல்லத்துரை அவ்வீட்டைத் தாண்டும் போதெல்லாம் ஏமாற்றமே காத்திருந்தது.

“இனியும் காலத்த மினக்கடுத்தினா வேற யாரவது வந்து இவளைத் தூக்கிக் கொண்டு போயிடுவினம்” என செல்லத்துரையின் உள்ளுணர்வு உணர்த்தியது.

சிவமணியைப் பற்றி ஆராய்ந்தறிந்துவிட்டு தனது தகப்பனிடம் மெல்ல விடயத்தைக் கூறினார். செல்லத்துரை கூறியவற்றைக் கேட்ட நடேசுச் சட்டம்பியாருக்கு உடம்பெல்லாம் வெலவெலத்தது.

“என்னடா சொல்லுறாய்? தாயில்லாப் பிள்ளை எண்டு உனக்குச் செல்லம் தந்து , உன்னைப் பளுதாக்கிப்போட்டன். சனங்களுக்கு உந்த விஷயம் தெரிஞ்சா நான் எப்பிடி வெளியால தல காட்டுறது?” எனக் கூறித் தலையில் கை வைத்தார்.

நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு தந்தையை அணுகினார் செல்லத்துரை 

“அப்பு, நான் எல்லாம் விசாரிச்சுப் போட்டுத்தான் உங்களிட்ட சொல்லுறன். நீங்கள் தானே நீ விருப்பப்படுற விசயத்த மறைக்காமச் சொல்லு எண்டு சொல்லுறனியள்.” அது தான் என இழுத்தார். 

“பேசாமலிருந்தா உவன் அந்தப் பெட்டையை இழுத்துக் கொண்டு ஓடினாலும் ஓடீடுவான்.” நடேசுச் சட்டம்பியாரின் மனதில் சட்டென்று இவ்வெண்ணம் துளிர்விட்டது.

“சரி பாப்பம்” வாஞ்சையுடன் காத்திருந்த செல்லத்துரையிடம் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் நடேசுச் சட்டம்பியார்.

செல்லத்துரையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . அல்லும் பகலும் சிவமணியை எண்ணிக்கொண்டிருந்தார்.

*

சாய்மானக் கதிரையில் அமர்ந்து விசிறிக்கொண்டிருந்த நடேசுச் சட்டம்பியார், வெத்திலைச் சீவலில் சுண்ணாம்பு தடவி வாய்க்குள்த் திணித்து விட்டு செல்லத்துரையை அழைத்தார். சிவமணியைப் பற்றித்தான் கூறப்போகிறார் என அறிந்து கொண்ட செல்லத்துரை அடுத்த கணமே தந்தையின் முன் பிரசன்னமானார்.

“நான் அவையளிட்டப் போய்க் கதைச்சனான். பிள்ளை நல்ல வடிவான பிள்ளை, தகப்பன் கவன்மன்ட் வேலையில இருந்து ரிட்டயர் ஆகீட்டாராம். எல்லாம் நல்லாத்தான் கிடக்கு ஆனால்…”

நடேசுச் சட்டம்பியாரின் முகம் சட்டென்று மாறியதை அவதானித்த செல்லதுரைக்கு நெஞ்சு படபடத்தது. 

நடேசுச் சட்டம்பியார் தொடர்ந்தார் “அந்தப் பிள்ளைக்கு அவை சாதகம் எழுதேல்லயாம்”

“அதால என்ன? சாதகத்திலயெல்லாம் ஒண்டுமில்லை அப்பு” 
செல்லத்துரையின் மேதாவித்தனத்தின் வெளிப்பாடு.

மகனை ஆவேசத்துடன் நோக்கினார் நடேசுச் சட்டம்பியார். 

“என்ன விசர்க்கதை கதைக்கிறாய். சாதகத்தில தான் எல்லாம் இருக்கு. உனக்குச் செவ்வாய் வேற இருக்கு, அந்தப் பிள்ளைக்கு இருக்குதோ , இல்லையோ ஒண்டும் தெரியாது. எந்த நம்பிக்கையில கலியாணம் பண்ணி வைக்கிறது. பேந்து ஏதாவது நடந்தா ஆர் பொறுப்பு?”

செல்லதுரைக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஒரு ஆண் எக்காரணத்திற்காகவும் அழக்கூடாது என சமூகம் வகுத்துவைத்த கோட்பாட்டையும் மீறி செல்லத்துரையின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

விழிநீர் சொரியும் செல்லத்துரையைப் பார்த்து நடேசுச் சட்டம்பியார் இரங்கினார்.

“சரி ஒண்டு செய்வம், எங்கட குலதெய்வம் முருகன் கோயில்ல பூக்கட்டிப் பாப்பம். ஐயரிட்டச் சொல்லி ரெண்டு நிறப் பூக்கட்டுவம். நாங்கள் நினைக்கிற வெள்ளை பூ வந்தால்க் கட்டலாம். இல்லையெண்டா அது பற்றி நினைக்கவே கூடாது. கடவுளின்ட முடிவு தான் கடைசி முடிவா இருக்கும்.”

ஓரிரு நாட்களிலேயே இறைவனின் ஒப்புதல் செல்லதுரைக்குக் கிடைத்தது. பிறகென்ன திருமணம் தான். செல்லத்துரை தாலிக்கயிறை சிவமணிக்கு அணிவிக்கும் வரை அவரின் முகமோ, பெயரோ அறியாதவள் அவள். முகந்தெரியாத கணவனை மனமார ஏற்றுக்கொண்டாள். 

வாழ்க்கையின் நீரோட்டத்தில் நான்கு மகவுகளை ஈன்றாள் சிவமணி. இடப்பெயர்வு, புலப்பெயர்வு, கல்வி, வேலை, திருமணம் என நால்வரும் நான்கு திசையில்ச் சென்று விட, உனக்கு நான், எனக்கு நீ என இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

*

சிந்தனை கலைந்த செல்லத்துரை திரும்பி மனைவியின் முகத்தைப் பார்க்கிறார். "இண்டைக்கு என்ன நாள் தெரியுமோ உனக்கு?" என்று கேட்டார். "என்ன நாள் ஐயா?" என்றபடி எதுவாய் இருக்குமோ என்று எண்ணியவளாய் செல்லதுரையை நிமிர்ந்து பார்த்தாள் சிவமணி. ஐம்பது வருடங்களுக்கு முன் செல்லதுரையை அடித்து வீழ்த்திய அந்தப் பார்வையை எதிர்கொண்டு தனக்குள் சிரித்துக் கொண்டார் செல்லத்துரை.

"உன்னை நான் கலியாணம் முடிச்சு இண்டையோட சரியா அம்பது வருஷம்" என்றார்.

"அட அதை நான் மறந்து போனன் பாத்தியளோ. ஓமோம் இண்டைக்குத் தான்" என்ற சிவமணியிடமிருந்து அவளது வாழ்வையே பிரதிபலிப்பதான நீண்டதொரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது.

மீண்டும் அவளை நோக்கிய செல்லத்துரை "இந்த அம்பது வருஷத்தில உன்னட்ட இருந்து நான் ஒண்டையும் மறைச்சதில்லை, ஒண்டைத் தவிர. அந்த ஒண்டையும் இண்டைக்கு நான் சொல்லப் போறன். "

"இது என்ன புதிராக் கிடக்கு" என்று நினைத்தபடி அலங்க, மலங்க விழித்தபடி செல்லதுரையை ஏறிட்டு நோக்கினாள் சிவமணி.

அவளது முகத்தைப் பார்க்காது, தெருவைப் பார்த்தபடி செல்லத்துரை கூறத் தொடங்கினார்.

"உனக்கு சாதகம் இல்லாதபடியா கோயில்ல பூக்கட்டிப் பாத்துத்தான் முடிவு சொல்லுவன் எண்டு அப்பு ஒரேயடியாச் சொல்லிப் போட்டார். 

வெள்ளைப் பூவும், சிவப்புப் பூவும் கட்டி வச்சு, குருக்கள் பூசையிலை வச்சுக்கொண்டு வாறதை சின்னப் பிள்ளை ஒண்டு எடுத்துத்தர, வெள்ளைப் பூ வந்தால் சம்மதம், சிவப்பெண்டால் இல்லை எண்டு அப்பு அடிச்சுச் சொல்லிப் போட்டார்.

குருக்களிண்ட மகன் என்ர நல்ல சிநேகிதன். அவனைப் பிடிச்சு ரெண்டிலயும் வெள்ளைப் பூவைக் கட்டுவிச்சன். அவன் எனக்கு உதவி செய்யேக்க இத உன்ர மனுசிக்குக் கூட சொல்லக் கூடாதெண்டு சத்தியம் வாங்கினவன். இப்ப அவனும் உயிரோட இல்லை. மூண்டு மாசத்துக்கு முதல் தான் பேப்பர்ல மரண அறிவித்தல் கிடந்தது." என்றார்.

ஆச்சரியப் புன்னகை சொரிந்த சிவமணியை வெற்றிக் களிப்புடன் நோக்கினார் செல்லத்துரை.சிவமணியின் சுருங்கிய கன்னம் கூட நாணத்தால் சிவந்தது.

All Rights Reserved © Saambavi Sivaji