Wednesday, April 30, 2014

மலர்களின் நடுவே மலர்ந்துள்ள மகளிர் கல்லுாரி

(Published in "The Uduvil Magazine - Harriet Winslow Number")



இயற்கை அன்னையின் கொடைகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி, இன்று தனது 190 வது ஆண்டில் காலடி பதிக்கின்றது. உடுவிலின் சிறப்பம்சமே இங்கு காணப்படும் பச்சைப்பசேலென்ற மரங்களும் பூக்களும் தான். உடுவில் ஒரு அழகிய பூக்களின் சாம்ராச்சியம். ஒவ்வொரு மரங்களும் நாம் கடந்து வந்த நாட்களை நினைவூட்டும் ஞாபகச்சின்னங்கள். உடுவிலிற்குள் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவர் மனதையும் இனம்புரியாத சந்தோஷம் வருடிச்செல்லும். பாடசாலை வாயிலை அடைந்தவுடன், வந்தாரை வரவேற்பதுபோல் நீண்டு வளர்ந்த அசோக மரங்களின் அணிவகுப்பை காணலாம்.

எமது அலுவலகத்திற்கு முன்னாலும், உயர்தர வகுப்புகளுக்குச் செல்லும் நடைபாதையிலும் காணப்படும் "Flame Of The Forest " என ஆங்கிலத்தில் வர்ணிக்கப்படும் வாகை மரம் மே,ஜூன் மாதங்களில் பூத்துக்குலுங்கும் அழகே தனி. சிவப்பு நிறப்பூக்கள் மரம் முழுவதையும் தழுவிய வண்ணம் காணப்படும். ஏனைய நாட்களில் வெறுமையாகக் காணப்படும் இம்மரத்தைப் பூக்களோடு பார்கின்றபோது பார்ப்பவர்களைப் பிரம்மிக்கவைக்கும்.




அடுத்ததாக எங்களுடைய பாடசாலையின் ஆரம்பமான “Mission House” இன் முன்பாகக் காணப்படும் பூந்தோட்டம் பலவகைப் பூக்களையும் செடிகளையும் தன்னகத்தே கொண்டு மிடுக்குடனும் எழிலுடனும் காணப்படுகின்றது. காலைப்பொழுதின் அழகை மேலும் மேருகூட்டுவன இந்தப்பூக்களும் செடிகளும் தான். இத்தோட்டதிற்குள் நுழைந்தவுடன், ஏதோ தாவரவியல் பூங்காவிற்குள் நுழைந்துவிட்டோமோ என எண்ணத்தோன்றுமளவிற்கு அரிய பூக்களும் செடிகளும் அழகாக தோட்டத்தை அலங்கரிக்கின்றன. பல வகைகளிலும் நிறங்களிலும் பூத்துக்குலுங்கும் செவ்வரத்தை, தோட்டத்தின் எழிலை மேலும் மெருகூட்டும் ரோஜாப்பூக்கள், வெள்ளை நிற ஆடையைப்போர்த்தியிருப்பது போன்ற தேமாப்பூக்கள், மரம் முழுவதிலும் படர்ந்து காணப்படும். “Mission House” இற்குள் செல்லும் வாயிலை அலங்கரிக்கும் போகன்வில்லா, றம்புட்டான் பூ என எல்லோராலும் அழைக்கப்படும் சிவப்பு நிறப்பூக்கள், இவை மட்டுமல்ல, இங்கிருக்கும் பூக்களின் அட்டவணை மிகவும் நீளமானது. மே மாதத்தில் மட்டும் வந்து மறையும் “may flower” எங்கள் மாணவிகள் மீது கொண்ட காதலால் உடுவிலில் மட்டும் ஜூலை வரை காத்திருப்பதைக் காணலாம். பல நிறங்களில் “corn flowers”, “lily” அந்தூரியம் என அட்டவணை நீண்டு கொண்டே செல்கின்றது.


அன்றலர்ந்த இந்தப் பூக்களுக்கும் nursery நோக்கி வரும் பிஞ்சு முகங்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடொன்றும் இல்லை.

இங்கு பூக்கள் மட்டுமல்ல பலவகையான குரோட்டன் வகைகளும் காணப்படுகின்றன.என்றுமே பச்சைப்பசேலென்று காணப்படும் "Ever green" செடியைப்பற்றி கட்டாயம் குறிப்பிட வேண்டும். "Building guard" என அழைக்கப்படும் குரோட்டன் தோட்டத்தின் காவலாளிகள் போல இரு மருங்கிலும் காணப்படுகின்றன. ஆனைக்கோரை வகைகளும், தம்போஜியா செடிகளும் ஏராளமாகக் காணப்படுகின்றன. தம்போஜியா செடியின் நாவல் நிறப்பூக்கள் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பன.

பாடசாலையின் "Jubilee hall "இற்கு முன்னால் காணப்படும் மகிழமரம் மிகப்பழமையான ஒரு சொத்து. ஏறத்தாள 1880 களிலேயே இம்மரம் பாடசாலையில் காணப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. 1880ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆசிரிய-மாணவிகள் புகைப்படத்தில் நீங்கள் இந்த மரத்தைக் காணலாம்.


பனை வகைகளில் அரிதான கிளைவைத்த மடுப்பனை கூட எமது பாடசாலயில் காணப்படுகின்றது.

அடுத்து எமது முன்னாள் அதிபர் திருமதி சரஸ்வதி சோமசுந்தரம் ஞாபகார்த்த கணணி ஆய்வுகூடத்திற்கு முன்னால் காணப்படும் மகிழ மரத்தைப் பற்றி ஆராய்வோம். இம்மரத்திற்குப் பின்னால் பல சுவையான சம்பவங்கள் காணப்படுகின்றன. இம்மரம் பூத்துக்குலுங்கும் காலம் பங்குனி சித்திரை மாதங்களே. இக்காலத்தில் இம்மரத்தைப் பார்த்தால் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருப்பது போல் மஞ்சள் பூக்கள் மரத்தை அலங்கரித்துக்காணப்படும். மரத்தை மட்டுமல்ல நிலத்திலும் கூட மஞ்சள் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும். சரி அந்த சுவையான சம்பவத்திற்கு வருவோம். மாணவிகள் யாசகம் கேட்போரைப் போல் மரத்திற்கு கீழே நின்று கைகளை நீட்டி பூக்களிற்காக யாசிப்பார். மேலிருந்து விழும் பூக்களை போட்டி போட்டு கைகளில் ஏந்திக்கொள்வர். ஒவ்வொருவர் மனதிலும் ஏதாவதொரு விருப்பத்தை வைத்துக்கொண்டு பூக்களை ஏந்துவர். ஒருவர் ஏழு பூக்களை ஏந்தினால் அவர்களுடைய விருப்பம் நிறைவேறும் என்பது மாணவிகளின் நம்பிக்கை. ஏழு பூக்களை ஏந்துவதற்காக மணிக்கணக்காக காத்திருப்பர்.




பங்குனி சித்திரை மாதங்களில் தான் முதலாம் தவணைப் பரீட்சைகள் நடைபெறும். அனேகமாக மாணவிகளின் வேண்டுதல்கள் எல்லாம் பரீட்சைகளில் அதிக புள்ளிகளைப் பெற வேண்டும் என்பதாகவே இருக்கும். இந்நிகழ்வை இது ஒரு தொடர்கதை எனக்குறிப்பிடலாம். ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சி தவறாது நடைபெறும்.

நிறைவாக நாங்கள் பார்க்க இருப்பது, பாடசாலை மைதானத்தில் காணப்படும் நாவல் மரத்தைப் பற்றி. இங்கு காணப்படும் பழமையான மரங்களில் இதுவும் ஒன்று. நாவல் மர அடிவாரம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு இடம். சிறுவர்கள் முதல் உயர்தர மாணவிகள் வரை இங்கு தான் பிரசன்னமாகியிருப்பர்.

எமது விடுதி மாணவிகளுக்குப் பிடித்தமான மரங்களில் இந்த நாவல் மரமும் ஒன்று. மாலை வேளைகளில் நாவற் பழங்களைக் களவாடுவது இவர்களின் வழக்கம். அக்காலத்தில் மாணவிகளைக் கவனிப்பதற்காகத் தாதி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அனைவரும் அவரை ”சின்னப்பிள்ளை அக்கா” என அழைத்தனர். விடுதி மாணவிகள் அளவுக்கதிகமாக நாவற் பழங்களை உட்கொண்டதும் சின்னப்பிள்ளை அக்காவினால் ”quinine” மருந்து வழங்கப்பட்டதும் அனைவரும் அறிந்த ஒரு விடயம்.

உடுவில் மகளிர் கல்லூரி எனும் அழகு ராணியை மெருகூட்டும் அம்சங்களில் எங்கள் பூமரச்சாம்ராசியதிற்கு நிறையவே பங்குண்டு.

"To you who knew the joys of Uduvil, remembrance is sweet: You have picked flowers from the garden in all their gay colours and caught the scent of jasmine; you've laughed with the little pink lilies as they sprang forth after the first rain; you've wandered along the garden paths in the evening twilight. Thank God for Uduvil flowers!"
- Ms Lulu Bookwalter, 1950 -



© Saambavi Sivaji

No comments:

Post a Comment