இன்னும் இரண்டே நாட்கள் அந்நிய தேசத்தைவிட்டு அவள் தன் தாய்நாட்டை அடைவதற்கு. இருபது வருடங்கள் கழித்து அவள் தன் சொந்த மண்ணில் கால்வைக்கப் போகிறாள். யுத்தத்தின் கொடூரத்தில் தன் மண்ணைவிட்டு துரத்தப்பட்டாள். அந்நிய நாட்டில் தஞ்சம் புகுந்தாள். இன்று மறுபடியும் தன் தாய்நாட்டை நோக்கி விரைகின்றாள்.
செல்லும் வழியெங்கும் அழகிய நாட்களின் நினைவுத்துாறல்கள். வயற்கரை வரம்பில் தோழிகளோடு அவள். பள்ளிப்பருவ நினைவலைகள் நெஞ்சில் துள்ளி விளையாட, மீண்டும் ஓர் பட்டாம்பூச்சியாய் உருமாறியதாக உணர்கிறாள். முற்றத்து எட்டுப்பெட்டி விளையாட்டில் முழங்காலில் ஏற்பட்ட காயங்கள், அதை மறைப்பதற்காகவே முழுப்பாவாடை அணிந்தாள் . யாருக்கும் தெரியாமல் மாரிகாலத்து மாங்காய்களை களவாக தின்றது, பின் காய்ச்சலினால் அவதிப்பட்டது என அவளது நினைவுப் பெட்டகத்தின் கதவு தானாகத் திறந்து கொண்டது.
எங்கள் தேசத்தை அடைந்துவிட்டோம் என பக்கத்தில் இருப்பவர்கள் கூறக்கேட்டாள். 'ஐயோ இதுவல்ல என் தேசம்' என கதறவேண்டும் போலிருந்தது அவளுக்கு. அவள் கண்முன்னே தெரிந்தனவெல்லாம் பற்றைகளும் காடுகளும் தான் . 'நான் வாழ்ந்த வீடு எங்கே? அது இருந்த அடையாளமே இல்லாமல் போய்விட்டதே என ஏங்கினாள்'. தொலைவில் தெரிந்த ஓர் வேப்பமரத்தை நோக்கி விரைந்தாள். அது அவளுடைய முற்றத்தில் நிழல் பரப்பிய அவர்களுடைய சொத்து. அவளுடைய அப்பாவின் இராசியான மரமும் கூட. அவர்கள் வாழ்ந்த வாழ்கையை நினைவு கூற இன்று மீதமிருப்பது இந்த வேப்பமரம் மட்டும்தான்.
எப்போது இங்கு வருவேன் என ஏங்கிய அவள் இதயம் இன்று எதற்காக இங்கு வந்தாய் என அவளையே திட்டியது. தொலைதூர கனவுகளும், தொலைத்துவிட்ட நிஜங்களும் தோழமைக்கு யாருமில்லை என உணர்த்தின. வலிகளுக்கும் ரணங்களுக்கும் பழக்கப்பட்டவள் அவள். வலிகளைச் சுமந்தவண்ணம் விடைதெரியா வினாக்களுடன் மீண்டும் விரைந்தாள் அந்நியதேசம் நோக்கி..........
© Saambavi Sivaji
No comments:
Post a Comment