Sunday, December 29, 2013

கூலிக்கு மாரடிப்போர்

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆங்கில எழுத்தாளரான அழகு சுப்ரமணியம் என்பவரால் 1964ல் வெளிவந்த ”The Professional Mourners” எனும் ஆங்கில சிறுகதையைத் தமிழாக்கும் முயற்சி.

கூலிக்கு மாரடிப்போர்

ஒரு  சனிக்கிழமை இரவு எனது ஆச்சியின் உயிர் பிரிந்த வேளை நான் எனது தம்பி தங்கையுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்தேன். மறுநாட்காலை ஆச்சியின் வீட்டிலிருந்து வந்த அழுகை ஓலத்துடனும் பறைமேள முழக்கத்துடனும் விழித்தோம். அவசரமாக உடையை மாற்றிக்கொண்டு ஆச்சியின் வீட்டை விரைந்தோம். அங்கு ஒரு பெரிய கூட்டம்.எல்லைவேலிக்கும் வெளி விறாந்தைக்கும் இடையில் உள்ள இடைவெளியைச் சனக்கூட்டம் நிரைப்படுத்தியிருந்தது

அந்தக் கூட்டத்திற்குள் ஒருவாறு நுழைந்து வீட்டின் நடுப்பகுதியை அடைந்துவிட்டோம்.  எமது கண்கள் அம்மாவைத் தேடின. நாங்கள் சந்திக்கும் முதல் மரண வீடு இது என்பதால் சற்றுப் பயமாகவே இருந்தது. நாங்கள் வீட்டை அடைந்ததும் அடையாததுமாக "நிகழ்வின் தலைவர்" இன் சத்தம் காதில் விழுந்தது. மரண நிகழ்வின் அனைத்து ஏற்பாடுகளிற்கும் அவர் தலைமை வகித்தார். அவர் எங்களுடைய மாமா, ஒரு சிறு பாடசாலையில் ஆசிரியர், அதுமட்டுமல்ல கொஞ்சம் மூளைக்கோளாறுள்ளவர்அவர் எப்பொழுதும் உரத்த தொனியில் விரைவாகப் பேசுவார். அவர் கோபமாக இருந்தால் முழுக்கிராமமும் கேட்கும் அளவிற்கு உச்சஸ்தாயியில் கத்துவார். இன்றும் கூட அவர் மிகுந்த கோபமாக உள்ளார் ஏனெனில் கூலிக்கு மாரடிப்போர் இன்னும் வந்து சேரவில்லை.

"நானே போய் அதுகளைக் கூட்டிக்கொண்டு வாறன்."  எனக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார். கூலிக்கு மாரடிப்போரைப் பற்றி நான் பல கதைகளைக் கேள்விப்பட்டுள்ளேன், ஆவலின் மிகுதியால் எனது தம்பி, தங்கையை விடுத்து அவர் பின்னால் ஓடினேன் . வீடுகளோ இரைச்சலோ அற்ற மணல் வீதிகளினுாடாகவும் ஒடுங்கிய  பாதைகளினுாடாகவும் நடந்தோம்இருப்பினும் பாம்புகள் சீறும் சத்தமும் நரிகள் ளையிடும் சத்தமும் கேட்பதாய் நான் உணர்ந்தேன்.   "பாம்புகள் உன்னைக் கடிக்காது. பயப்பிட வேண்டாம்" மாமாவின் திடப்படுத்தல். கடற்கரையில் நிரையாக குடிசைகள் உள்ள பகுதியை வந்தடைந்தோம். ஆங்காங்கே மீனவர்கள் சிலர் துணைவியரின் உதவியுடன் வலைகளை சரி செய்துகொண்டிருந்தனர் . வேறு சிலர் கட்டுமரத்தைக் கடலில் தள்ளிக்கொண்டிருந்தனர். "எல்லாத்தையும் நிப்பாட்டுங்கோ, மூளைகெட்ட பரதேசிகளே" மாமா பலத்த சத்தத்துடன் அவர்களிடம் விரைந்தார்

"என்ர மாமீன்ர செத்தவீடு நடக்குதெண்டு உங்களுக்குத் தெரியாதோ கீழ்ப்புத்திக்காரங்களே, அங்க நிக்க வேண்டிய ஆக்கள் ஏன்  இங்க நிக்கிறியள்?"

"எங்களுக்கு செத்த வீட்டைப் பற்றி தெரியாது ஐயா" எனக் கூறிக் கொண்டு மீன்பிடி வலைகளை விட்டு விலகினர். "நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில அங்க இருப்பம்" கரங்களைக் கூப்பியவாறு மண்டியிட்டனர்அவர்களைக் கடிந்த வண்ணம் கூலிக்கு மாரடிப்போரைத் தேடி மாமா விரைந்தார். "அங்க தான் இந்தக் கேடுகெட்ட பொம்பிளையள் இருக்கிறதுகள்" எனக் கூறி நாங்கள் முதலில் பார்த்த குடில்களை விடச் சிறிய குடில்களைச் சுட்டிக் காட்டினார்.
குடிலுக்கு வெளியே நின்று உள்ளிருப்பவர்களை அழைத்தார். கரடுமுரடான சேலைகளை அணிந்த இரு பெண்கள் வெளியே வந்தனர்.அவர்கள் அணிந்த சேலைகள் தோள்ப்பட்டையையோ, தலைப்பகுதியையோ மறைக்கவில்லை. மணிக்கட்டிலிருந்து முழங்கைவரைக் காப்புக்களை அணிந்திருந்தனர். அவர்கள் நடக்கும் போது காற்சலங்கைகள் கிலுங்கின. மாமா அவர்களைப் பார்த்துக் கத்தினார்.

 "நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பின்னான் என்ர  மாமீன்ர செத்தவீடு இண்டைக்கு நடக்கப்போகுதெண்டு இவ்வளவு நேரமாகியும் ஏன் இன்னும் வரேல்ல?"   
 
"நாங்கள் வாறத்துக்குத்தான் வெளிக்கிட்டுக்கொண்டு இருந்தனாங்கள் ஐயா தயவு செய்து எங்களை மன்னியுங்கோ" அவர்களில் ஒரு பெண் கூறினாள்.

"மிச்சாக்கள் எங்க?" நிகழ்வின் தலைவரின் உறுமல்

"பக்கத்தில ரெண்டு சகோதரிகள் தான் இருக்கினம் மிச்சாக்கள் எங்கை எண்டு எங்களுக்குத் தெரியாதையா. ஆனால் இவையும் கூட இண்டைக்கு வரேலாது அவேன்ர  அம்மா காலமை செத்துப்போயிற்றா”

"இது என்ன முட்டாள்தனம்! எங்க அந்தப் பொம்பிளையள் இருக்கிறதுகள்?" அவர் வலிந்து வற்புறுத்தினார்.

"இங்க இருந்து கன தூரத்தில இல்ல ஐயா"

"என்ன அங்க கூட்டிக்கொண்டு போ"

அந்த இரு பெண்களும் முன்னால் செல்ல நாங்கள் பின் தொடர்ந்தோம். இவர்கள் ஒரு குடிலின் வெளியே நின்று இரு சகோதரிகளையும் அழைத்தனர். தமது மார்பகங்களின் மீது வழுக்கி இருந்த சேலைகளைக் கட்டியபடி அவர்கள் வெளிப்பட்டனர்.

“சிறிது நேரம் அவ்விடத்திலேயே நின்று தயங்கிய பின்னர் நிகழ்வின் தலைவரின் காலடியில் விழுந்தனர்.

 "இண்டைக்கு மட்டும் எங்களை மன்னியுங்கோ ஐயா எங்கட அம்மா இண்டைக்கு காலமை மோசம்போய்ற்றா. நாங்கள் சரியான கவலையாய் இருக்கிறம் மற்றாக்களிண்ட செத்தவீட்டை வந்து அழுகிற நிலமையில நாங்கள் இல்லை.

"அவமரியாதை" தலைவர் சத்தமிட்டார்.  என்ர மாமீன்ர மரணச்சடங்கில அழுகிறத்துக்கு ரெண்டு பேர் பத்தாது. அவா யார் எண்டு தெரியும்தானே.
"அவையள விடுங்கோ ஐயா" இடைத்தரகராக பாத்திரமேற்ற பெண் கூறினாள்.

 "இது நியாயமில்லை . அவையள் தங்கட அம்மாண்ட செத்தவீட்டை உண்மையா அழுறத விட்டிட்டு உங்கட வீட்டை வந்து நடிக்கேலாது.”
என்னுடைய உறவினரின் உதடுகள் நடுங்கியதையும், கண்கள் செந்நிறமானதையும் அவதானித்தேன். சற்றுமுன் இடைத்தரகராகத் தொழிற்பட்ட பெண் நிலத்தை நோக்கினாள். நான் பரிதாபமாகத் தலையசைத்தேன். தலைவரின் சினம் இப்போது மணல் அணைகளினுாடு பாயும் நீர் போல என்னை நோக்கித் திரும்பியது.

"நீ என்ன முட்டாளா?" தலைவர் என்னைத் திட்டினார். "இதைப் பற்றி எல்லாம் உனக்கு என்ன தெரியும்? உன்ர அப்பாண்ட வழக்கறிஞ நண்பர்கள், உயர் நீதிமன்ற நீதிபதி, பொலிஸ் நீதவான் எல்லாரும் வருகினம். எங்கட செத்தவீட்டில மாரடிக்கிறாக்கள் கனக்கப்பேர் இல்லாட்டி எங்களைப் பற்றி என்ன நினைப்பினம்? "

முழந்தாளிட்ட நிலையிலிருந்த சகோதரிகள் மீண்டும் இறைஞ்சினர். "நாங்கள் வேணுமெண்டு அப்பிடிச் சொல்லேல்ல ஐயா" அவர்களில் ஒருத்தி கூறினாள். "இந்த முறை மட்டும் எங்கள விடுங்கோ. உங்கட வீட்டை இன்னொரு மரணவீடு நடக்கேக்கை எங்கட தொண்டை காயுறவரைக்கும் குளறுவம்!"

"உது என்ன தடிப்பு?" மாமா மீண்டும் சத்தமிட்டார். அப்ப என்ர வீட்டை இன்னொரு செத்தவீடு நடக்கவேணுமெண்டு ஆசைப்படுறாய் என்ன? நான் சாக வேணும் எண்டு தான் நீ நினைப்பாய். கேடுகெட்ட பிராணியள். நீதிபதியிட்ட சொல்லி  நல்ல அடி வங்கித் தரவேணும் உந்த மாதிரிக் கதைக்கிறத்துக்கு" எனக் கூறி அவர்களது சேலையைப் பிடித்து இருவரையும் தற தற வென தரையில் இழுத்தபடி சிறிது தூரம் நடந்தார்.
"தயவு செய்து உங்கட கையை எடுங்கோ, நாங்கள் வாறம்." இருவரும் புலம்பினர்.

நிகழ்வின் தலைவர் அவர்களை விடுவித்துவிட்டு முன்னே நடந்தார். நாங்கள் அவரைப் பின்தொடா்ந்தோம். ஆச்சியின் வீட்டை அடைந்தவுடன் மாரடிப்போர் கைகளை மேலே உயர்த்தி தலைமுடியைத் தளர்த்தி அழுதனர். மரண வீட்டின் ஏனைய பெண் உறவினர் மற்றும் நண்பர்கள் இரண்டு, மூன்று பேர் கொண்ட குழுக்களாக ஒவ்வொருவர் கழுத்திலும் மற்றையவரின் தலையை சாய்த்ததபடி அமர்ந்திருந்தனர். இவர்களுடன் கூலிக்கு மாரடிப்போர் இணைந்தனர். ஆனால் மற்றைய பெண்களிலிருந்து சற்று தொலைவில் அமர்ந்தனர். கைகளை வானை நோக்கி உயர்த்தி, தமது தலையையும் மாரையும் கைகளால்  அடித்தவண்ணம் புலம்பியபடி அழுதனர். அவர்கள் அழும்போது ஆச்சியியைப் போற்றிப் பல வார்த்தைகளைக் கூறினர். சிவபெருமானின் அருளால்த் தான் ஆச்சி அவருடைய செல்லப் பேரப்பிள்ளை மலேசியாவில இருந்து வரும் வரை உயிரோடிருந்தார் எனக் கூட்டத்தில் கவலையுடன் அழுதுகொண்டிருந்த பெண்கள் கூறியது மாரடிப்போரின் காதில் விழுந்தது. தமக்கு ஒரு புது ஸ்லோகம் கிடைத்ததை இட்டு அவர்கள் நிலத்திலிருந்து எழுந்தனர், தலையைக் குமைத்து, கைகளைக் குறுக்காகக் கட்டி தோள்ப்பட்டைகளை அடித்தவாறு அழுதனர்.

"உங்கட செல்லப்பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ ஓ ஓ எங்கட பாசமுள்ள அம்மாவே...."

"உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ அம்மாவே"

இதே நேரத்தில் தன்னுடைய கைங்கரியத்தைப் பற்றி நிகழ்வின் தலைவர் தனது நண்பர்களுக்குப் பறைசாற்றிக்கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தது போலல்லாது அனைவரும் அவரது கொடூரமான செயலைக்கேட்டுத் திகைப்படைந்தனர். நிகழ்வின் தலைவரின் மனிதாபிமானமற்ற செயலிற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தலைவரை மாரடிப்போரிடம் மன்னிப்புக் கேட்கும்படி செய்தனர். நிகழ்விற்கு வந்திருந்தவர்களில் பலர் தாயை இழந்த சகோதரிகளிற்கு தமது துக்கத்தைத் தெரிவித்தனர். சகோதரிகளுக்கு நேர்ந்த அவலத்துக்குப் பணம் தருவதாக வாக்குறுதியளித்த அப்பா, அவர்களை வீடு செல்லுமாறு வலிந்தார்.

நிகழ்வின் தலைவர் தண்டிக்கப்பட்டார். மாரடிப்போர் மரணச்சடங்கு முடியும் வரை தமது பங்களிப்பை வழங்குவதாகக் கூறினர். நிகழ்வின் தலைவரின் செயல் அனைவராலும் வெகுவாக விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனைச் சரி செய்வதற்காக முன்னைவிட அதிகமாக அனைத்து வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பறைமேளம் அடிப்போரைக் கடிந்தார். ஏனெனில் அவர்களால் மாரடிப்போரின் அழுகை ஒலிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

பின்னர் சடங்கிற்குத் தேவையான அரிசி, சாம்பிராணி மற்றும் இதர இத்தியாதிகளை பூதவுடலுக்கு அண்மையில்க் கொண்டு வந்து வைத்தார். மாரடிப்போரை அழைத்து வருவதற்கான அவரது முயற்ச்சியின் பயனாக ஏற்பட்ட களைப்பினால், திடீரென மயக்கமுற்றுத்  தரையைத் தழுவினார். கூட்டத்திலிருந்த சிலர் கூச்சலிட்டனர், ஏனையோர் தலைவருக்கு உதவிக்கு ஓடினர். அவரை ஒரு மூலையில் அமர்த்தி தண்ணீரால் முகத்தை அலம்பினர். ஒரு சில நிமிடங்களில் தலைவர் தெளிவடைந்தார். தான் விரைவில் சரியாகி விடுவேன் எனக் கூறினார். தலைவரின் நண்பர்கள் மரணச்சடங்கை நடாத்துவதற்க்குப் போதிய ஆட்கள் இருப்பதனால் தலைவரை  ஓய்வெடுக்குமாறு கூறினர். ஓய்விலிருந்த சகோதரிகள் இப்போது தமது கீச்சிடும் ஒலியினால் இடத்தை நிரப்பினர். தலைவரைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாது புலம்பினர். நான்கு மாரடிக்கும் பெண்களும்  ஒன்றாக இணைந்தனர். அவர்களது உடல்கள் காற்றில் ஆடும் நாணல் போல் அசைந்தாடின. அனைவரும் ஒரே பல்லவியில்ப் புலம்பினர்.

"ஏழைகள் எல்லாரும் நீங்கள் இல்லாம தவிக்கப்போகினமே! ஓ நீங்கள் கொடைவள்ளலேல்லோ ஓ..... ஓ…. ஓ.....”

"கொண்டாட்டங்களில ஆர் எங்களுக்குச் சாப்பாடு தரப்போகினம்?"

""உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ எங்கட பாசமான அம்மா...."

"உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ அம்மாவே"

சிறிது நேரத்தில் அவர்களது புலம்பல் மெதுவாகத் தேய்ந்துகொண்டு சென்றது. ஆனால் ஐயர் வந்தவுடன் மீண்டும் புலம்பல் உச்சக்கட்டத்தை எட்டியது. ஐயா் தன்னுடைய கிரியைகளைச் செய்யும் வரை அமைதி நிலவியது. அடிக்கடி உச்சரிக்கப்படும் 'பேரப்பிள்ளை' என்ற வார்த்தை ஐயரின் ஆவலை அதிகப்படுத்தியது. பின் அவருக்கும் தம்புவைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. ஐயர் தம்புவைப் பூதவுடலுக்கு அருகில் அழைத்து ஊதுவர்த்தி ஏற்றிப் பிரார்த்தனை செய்யுமாறு கூறினார். இவ்வளவு நேரமும் அடக்கிவைத்திருந்த கவலை கண்ணீராய்த் தம்புவின் கண்களிலிருந்து வழிந்தது.

"எனக்காக இவ்வளவு நாளும் பாத்துக்கொண்டு இருந்தீங்களே" தம்பு அழுதான்.

"விதி என்னை இவ்வளவு நாளும் உங்களிட்டக் கொண்டுவந்து சேர்க்கேல்லை. இப்ப நான் வந்த பிறகு நீங்கள் படுத்தபடுக்கையாயீட்டீங்களே. உங்களோட ஒருக்காக் கூட என்னால கதைக்க முடியேல்ல"

மாரடிப்போரின் புலம்பலுக்கு இன்னுமொரு ஸ்லோகம் கிடைத்தது.
"ஏன் இவ்வளவு நாளும் பேசாம இருந்தனீங்கள் ஒரு பெரிய வழக்கறிஞரிண்ட அம்மாவே.....”

"உங்கட பட்சமுள்ள சொந்தத்தோட ஒருக்காக்  கதைக்கமாட்டியளோ அம்மாவே....."

"மீன் போல இருக்கிற உங்கட கண்ணைத் திறவுங்கோ...."

"மதுரை மீனாட்சி அம்மனிண்ட கண்ணெல்லோ உங்களிண்ட கண்"

"உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ ஓ ஓ எங்கட பாசமான அம்மாவே...."

"உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ அம்மாவே"

All Rights Reserved © Saambavi Sivaji