Saturday, January 18, 2014

கணிதவியலாளா்

யாழ்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட அழகு சுப்ரமணியம் எனும் பிரபல  எழுத்தாளரால் 1950 காலப்பகுதிகளில் எழுதப்பட்டThe Mathematicianஎனும் ஆங்கில சிறுகதையை தமிழாக்கம்  செய்யும் ஒரு முயற்சி. இங்கு பிரசுரிக்கப்படுவது எனது தமிழாக்கத்தின் சுருங்கிய வடிவம்.




அது ஒரு நிலவில் ஒளிர்ந்த இரவு. அந்நகரத்தின் தெருக்களில் அங்குமிங்குமாக மக்கள் கூட்டம். அவர்களுள் புதிதாக திருமணமான ஒரு தம்பதியினர். அவர்கள் இருவரும் அருகருகே செல்லவில்லை. அக்கணவன் மனைவியை விட ஒரு அடி முன்னாடி நடக்கிறான். அவர்களின் உரையாடல் சற்று முறைசார் ஒழுங்கில் நடைபெறுகிறது. இருவரும் படித்தவர்கள் போன்று காட்சி தருகின்றனர்.


அவர்களுக்கிடையிலான அந்த இடைவெளி தவிர்க்கக் கூடியதாக இருப்பினும் அக்கணவன் முன்னே செல்வதற்கு முன்னுரிமை கொடுப்பவன் போல தோற்றமளித்தான்.

அப்பெண்ணினுடைய கணவன் சந்திரம் உயர்தரமாணவர்களுக்கு கணிதம் கற்பிக்கிறார். அவருடைய கல்விசார் தகமைகள் ஒரு விரிவுரையாளராக இருப்பதற்கு தகுதி வாய்ந்தவைசந்திரமின் நோக்கம் கூட அதுவாகவே இருந்தது.

சுபத்ரா, சந்திரமின் மனைவி திடீரென்று எதையோ நினைவுகூர்வது போல் தெரிந்தது.
என்ன யோசிக்கிறாய்?” சந்திரம் சுபத்ராவிடம் கேட்டார்.

நான் Tamarind பாடசாலையில களித்த நாட்களைப் பற்றி யோசிக்கிறேன். அங்க பாருங்கோ அந்த சுவர்களுக்கு மேல ஒரு பில்டிங் தெரியுதெல்லோ

ஓம்

அங்க தான் நான் படிச்சனான்

தரகர் சொன்னவர் நீ படிச்ச பொம்பிளை எண்டு. நீ கனக்க படிச்சனியோ ?”

நான் Third Form வரையும் படிச்சனான். Junior Cambridge Examination எல்லாம் பாஸ் பண்ண வேண்டும் எண்டு நினைச்சனான். ஆனால் அதுக்கிடையில  கல்யாணம் பண்ணி வச்சிட்டினம்

உனக்கு ஏமாற்றமா இருக்கேல்லையோ?”

இல்லை, இல்லை”   சந்திர ஒளியில் அவளது பற்கள் பளிச்சிட சிரித்தாள் சுபத்ரா

நீ கணக்கும் படிச்சனியா?”

ஓம் நான் அட்சர கணிதம், கேத்திர  கணிதம் எல்லாம் படிச்சனான்.”

சரி சமாந்தரக்கோடுகள் எண்டா  என்ன?”

சமாந்தரக் கோடுகள் ஒன்றை ஒன்று ஒருபோதும் சந்திக்காது

இது மிகச் சரியான டெபினிஷன் இல்லை. நீ சொல்லுறது

அடிப்படை கணிதம்  படிச்சாக்கள்  சொல்லுற மாதிரி இருக்கு

அப்ப நீங்கள் எப்பிடி சொல்லுவீங்கள்?”

சமந்தரக்கோடுகள் ஒன்றை ஒன்று முடிவிலியில் சந்திக்கும். சுபத்ரா நான் ஒரு கணித மேதை தெரியுமா?”

ஓம் நீங்கள் நல்லாப் படிச்ச ஆள்சுபத்ராவின் பதில்

நீயும் படிசிருக்கிறாய் ஆனால் கனக்க இல்லை. பொம்பிளையளுக்கு கனக்கப் படிப்பு தேவை இல்லை.”

மீண்டும் சுபத்ரா புன்னகைத்தாள். அவளுடைய வெள்ளைப் பற்கள் சந்திரனை விடப் பிரகாசமாக இருந்தன. அவர்கள் தொடர்ந்து நடந்தனர். சந்திரமின் பின்னால் சுபத்ரா.
     
தொடர்ந்த வருடங்களில் சந்திரமின் நாட்டம் முழுவதுமாக கணிதத்திலேயே காணப்பட்டது. சுபத்ரா சந்திரமிடம்  தன்னுடைய விருப்பங்களை வார்த்தைகளாலோஅல்லது செயல்களாலோ ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. ஒரு மனைவி எவ்வாறு இருக்க வேண்டும்  என சமூகம் வகுத்து வைத்த விதிமுறைகளைத் தவறாது பின்பற்றினாள். சந்திரம் திருமண வாழ்க்கையை முற்றாக உதாசீனம் செய்தார் என்றும் கூற முடியாது. ஏனெனில் தொடர்ச்சியான இடைவெளிகளில் சுபத்ரா குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.

சந்திரம் தான் ஒரு கணித மேதை எனும் கூற்றிற்கு சுபத்ராவை அடி பணிய வைத்தார். சந்திரமின் வாழ்க்கையை கணிதத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்க வேண்டும் மாறாக சாதாரண மனிதர்களின் சமூக வாழ்க்கையோடு அல்ல.

சந்திரம் நீண்ட தூரம் நடை பயணம் செல்வது வழக்கம். அவர் வீடு திரும்பும்போது சுபத்ரா நீங்கள் உங்களுடைய நண்பர்கள் யாரையாவது சந்தித்தீர்களா எனக் கேட்டால் அவருடைய பதில் "இல்லை நான் கணிதத்தின் பாதையில் நடந்து கொண்டிருந்தேன்." என்பதாக இருக்கும்.

சந்திரம் தன்னுடைய அயலவர், உறவினர்களுடன் அடிக்கடி சண்டையிடுவார். ஏனையோரில் எப்போதும் பிழை கண்டு பிடிப்பார். Calculus இல் காணப்படும் கடினமான கணித்தல்களைக் கூட இலகுவாக செய்து முடிக்கும் சந்திரம், பலசரக்கு கடையில் பொருட்கள் வாங்கும் போது மட்டும் கூட்டல் பிழை விடுவார்தன்னுடைய குழந்தைகளை முற்றாக நிராகரித்தார்

தன்னுடைய கணவன் ஒரு நியூட்டனாகவோ ராமானுஜமாகவோ வருவார். ஆகவே அவருடைய தவறுகளை சற்றே விலக்கி அவரை ஒரு கணித மேதையாக மட்டும் நோக்குமாறு சுபத்ரா உறவினர்களிடமும் நண்பர்களிடமும் வேண்டிக்கொள்வாள். சந்திரமிற்கேற்றாற்போல் தன்னை மாற்றிக் கொண்டாள்.

சந்திரம் ஒரு அசாதாரண மனிதரைப் போல் தோற்றமளித்தார். ஒன்றுக்கொன்று முரணான காலணிகளை அணிவார். நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விட்டு அவர்கள் முற்றுகையிடும் நேரம் கணிதத்தில் நீராடச் சென்று விடுவார்.கடுமையான மழை நாட்களில் நீண்ட தூரம் நடந்து செல்வார். கடினமான கணக்குகளை  இலகுவாகக் கணிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்தார். சந்திரமின் குறிக்கோளும் நிறைவேறியது. இவரது கணிதப் புலமைக்கு உலகளாவிக ரீதியில் விருதும் கிடைத்தது. அதன் விளைவாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

சந்திரமின் கணித வாழ்க்கைக்கு பல்கலைக்கழகம் இடம் கொடுக்கவில்லை. ஏனைய பேராசிரியர்களைப் பார்க்க சந்திரமுக்குப் பொறாமையாக இருந்தது. அனைவரும் தங்களுடைய துறை தவிர்ந்த வேறு துறைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகக்  காணப்பட்டனர்.

ஒரு நாள் சந்திரம் தனது மாணவர்களுக்கு தான் வைத்த பயிற்சிப்  பரீட்சையை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அனைத்து மாணவர்களும் தீவிரமாக பரீட்சை எழுதிக் கொண்டிருந்தனர். ஒரு மாணவனின் விடைத்தாள் மட்டும் வெறுமையாகக் காணப்பட்டது. சந்திரம் அம்மாணவனை நெருங்கினார். அவனுடைய விடைத்தாளில் இரண்டு வரிகள் மட்டுமே காணப்பட்டன. அம்மாணவனின் கையை விடைத்தாளிளிருந்து பலவந்தமாக விலக்கி முதலாவது வரியை வாசித்தார்.

சந்திரம் + கணிதம் = முடிவிலி

சந்திரமின் முகம் என்றுமில்லாதவாறு பிரகாசித்தது. மண்டபத்தில் மகிழ்ச்சியாக நடந்தார். “நியூட்டன், ராமானுஜம், சந்திரம், சந்திரம் நியூட்டன், ராமானுஜம்சந்திரம் மீண்டும் மீண்டும் இவ்வார்த்தைகளை மனதார உச்சரித்தார்.

திடீரென்று ஏதோ சிந்தனை வயப்பட்டவர் போல அம்மாணவனை நோக்கி விரைந்தார். இரண்டாவது வரியைக் காண்பிக்குமாறு அவனை வற்புறுத்தினார். இரண்டாவது வரியை வாசித்தார்.

சந்திரம் - கணிதம் = பூச்சியம்

சந்திரமின் முகம் இருண்டது. தனது உடமைகள் அனைத்தையும் இழந்தவா் போல் பல்கலைக்கழகத்தை விட்டு நடந்தார்.

சுபத்ரா எங்க இருக்கிறாய்?” சந்திரனின் அலறல்

இங்க உங்களுக்குப் பின்னால நிக்கிறன்“

சுபத்ராவை வெளியே இழுத்து வந்தார் சந்திரம்

 உரத்த குரலில் சந்திரம் + கணிதம் =  என்ன?” என்று கேட்டார்

செய்வதறியாது சுபத்ரா. முடிவிலியைப் பற்றி அவள் அறிந்திருந்தாலும் தன்னுடைய அறிவிற்கேற்றாற் போல் விளக்கமளித்தாள்.

சந்திரம் + கணிதம் எண்டால் கடலையும் விடப் பெரியது.”

அருமை நீ நல்ல வடிவா விளக்கம் சொல்லுறாய்சுபத்ராவை அன்பாக கட்டி அணைத்தார் சந்திரம்.

கணவனாக இருந்தாலும் கூட பொது இடங்களில் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடாது எனும் கோட்பாட்டின் கீழ் வளர்த்தெடுக்கப்பட்ட சுபத்ரா சந்திரமின் கரங்களை விலக்கினாள். இவர் ஏன் இண்டைக்கு வித்தியாசமா இருக்கிறார்? இல்ல இல்ல இவர் ஒரு மேதை அது தான் அப்பிடி இருக்கிறார். சுபத்ரா தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

சுபத்ரா

ஓம் ப்ரொபெசர்

இப்ப சொல்லு  சந்திரம்கணிதம்= என்ன?”

அது சரியான ஈசி நீங்க கணிதம் இல்லாட்டி ஒண்டுமே இல்லை

சந்திரம் சுபத்ராவை ஆவேசமான வார்த்தைகளால்  திட்டினார். இரு கைகளையும் மேலே உயர்த்தி உரத்த தொனியில் சத்தமிட ஆரம்பித்தார். அவர்கள் இருவரையும் சுற்றி ஒரு பெரிய கூட்டம். சிலர் சந்திரம் பைத்தியமாகி விட்டார் எனக் கூறினார். வேறு சிலர் இது மேதைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்சனை சில நொடிகளில் சரியாகி விடும் என விவாதித்தனர். ஏனையோர் சந்திரம் கொஸ்மிக் நடனம் ஆடுகிறார் என தீவிரமாக நம்பினார்.

சந்திரம் கூட்டத்தைப் பிய்த்துக்கொண்டு பல்கலைக்கழக துணைவேந்தரின்  வீட்டை நோக்கி ஓடினார். தன்னுடைய இரு கேள்விகளுக்கும் பதில் சொல்லுமாறு அவரை உலுப்பினார். பலநிமிட பிரயத்தனத்தின் பிற்பாடு துணைவேந்தர் உதவியாட்களின் அனுசரணையுடன் சந்திரமை வாகனத்தில் ஏற்றி மனநல மருத்துவமனைக்கு விரைந்தார்.

சுபத்ராவை சில பெண்கள் கூட்டிச் செல்வதை வாகனத்தினுாடாக அவதானித்த சந்திரம் சுபத்ராவை நோக்கி அலறினார்.

சந்திரம் நீங்க சுபத்ராவை இப்ப பாக்கேலாதுகண்டிப்பான குரலில் துணைவேந்தா்.

சரி ஒரு பிரச்சினையும் இல்லை. நான் அவளை முடிவிலியில் சந்திக்கிறேன்.”
                     ***
All Rights Reserved © Saambavi Sivaji   

  

  


No comments:

Post a Comment