Thursday, February 14, 2013

அபலை




கடற்கரை  மணலில் விளையாடுவதுதான் அவளின் ஒரே ஒரு பொழுதுபோக்குபிஞ்சு விரல்கள் மணல் வீடு கட்டுவதும், அவை அலைகளுக்கு இரையாவது தினம் தினம் நடப்பவை.  பத்து வயதே நிரம்பிய அம் மழலையின் நெஞ்சில் ஓராயிரம் கனவுகள். தொலைதூரத்தில் தெரியும் அடிவானைத் தொட்டுவிடவேண்டும், இதமான தென்றலை அணைத்தபடி உறங்கவண்டும், இளவேனில் நேரம் இறக்கைகள் வைத்துப் பறந்திட வேண்டும், அலைகளோடு அலையாக கரை தொட வேண்டும் என  ஆசைகளும் கனவுகளும் நெஞ்சைவிட்டகலாமல்  நீண்டு கொண்டே சென்றன.

வசீகரிக்கும் வதனத்தில், இரு கருவண்டுகள் அவளின் கனவுகளைப்  பறைசாற்றும். காதோரம் சுருண்டிருக்கும் குழல்கள் அவள் விரல் தொட தவமிருக்கும். முழுநிலவு  தோற்றுவிடும் அவளது முகஅழகில். புன்னகை செய்யும் அகன்ற விழிகள் செய்யும் தொடர்பாடல் வார்த்தைகளை வென்றுவிடும். "கயல்விழி " ஆம் பெயரிற்கேற்றாற் போல் அவள் கயல் தான்.

அவளது ஆசைகள் ஆற்று வெள்ளம் போல் இருந்தாலும், வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே  சுழன்றோடியது. பாடசாலை, வீடு ,கடற்கரை  எனும் முக்கோணிதான் அவளது வாழ்க்கை. பாடசாலையில்  சுட்டிப்பெண்கெட்டிக்காரி,புத்திசாலி என அவளுக்குப்  பல பெயர்கள். ஆசிரியர்களின் அன்பிற்குரிய மாணவி. அவளின் வீடு ஒரு மண் குடில்,ஓலைகளால் வேயப்பட்டது. மழைக்கு இவர்கள் வீட்டை நனைப்பது மிகவும் பிடிக்கும். கயல்விழிக்கு நனைவது ஒன்றும் புதிதல்ல. பழகிப்போயின ஒன்று. மழை நாட்களில் அவளது புத்தகங்களைப் பாதுகாப்பதில் தான் அவளது முழுக்கவனமும் குவிந்திருக்கும்.

கயலின் அம்மாவின் ஒரே கனவு மகளை மருத்துவராக்குவது. காலை முதல் மாலை வரை கசிப்புக்கடையில் தவமிருக்கும் கணவனுடன் தனது கனவுகளை நிறைவேற்றமுடியாது என உணர்ந்திட்ட தாய் பணிப்பெண்ணாக வேற்று தேசம் புறப்பட்டாள். தாய் அனுப்பும் பணம் பாடசாலை மூலமாக  கயலிற்குக்  கிடைக்கப்பெறும். தனக்காக உழைக்கும் தாயின் கனவை நிறைவேற்றுவதே கயலின் ஒரே நோக்கமாக இருந்தது. அம்மாவின் அன்பிற்காக அவள் ஏங்கும் போதெல்லாம் பாட்டியின் அரவணைப்பு அவளை ஆறுதற்படுத்தும். முதுமையின் பிடியில் இருந்த பாட்டி கட்டிலோடு முடங்கிவிட பிஞ்சு விரல்கள் வலியை உணர்ந்தன. குடிகார அப்பனுக்கு சமைத்தல்,பாட்டியைப் பராமரித்தல்,பாடசாலை வேலைகள் ........  வலிகள் அதிகமானாலும் அவளது கனவுகள் கலையாமல் காத்திருந்தன. தனது பொழுதுகளை கடலோடு கழித்தாள். அலைகள் வந்து அவளது பிஞ்சு விரலை ஸ்பரிசம் செய்யும் போதெல்லாம், தாயின் கதகதப்பை உணர்ந்தவள் கடலை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தாள்.

நாட்கள் கடந்தன, ஒருநாள் அவள் வழக்கம் போலவே  மணல் வீடு கட்டி, அதை கடலுக்கு இரையாக்கி,கால்களை அலைகள் தழுவக் காத்திருந்தாள். சாயங்காலப்பொழுது, இதமான தென்றல், இடையிடையே அவளை உரசிச்செல்லும் குளிர்காற்று, தூரததில் சிறு பொட்டாகக் காட்சியளிக்கும் தோணிகள், அவள் இரசிப்பதற்கு இன்னும் நிறையவே இருந்தன. ஆனால் பாட்டியின் ஞாபகம் வரவே தனது குடிலை நோக்கி விரைந்தாள். தனது வழமையான கடமைகளை முடித்துவிட்டு புத்தகங்களை புரட்டினாள், தூக்கம் அவளைப் புரட்டியது.  கண்ணயர்ந்து கவலைகள் மறந்து தூங்கினாள்.

மறுநாட்காலையில் பாடசாலைக்கு கயல் வராமையை உணா்ந்த ஆசிரியை " பிள்ளையள் கயல் ஏன் ஸ்கூலுக்கு வரேல்லை."  "தெரியாது ரீச்சர் "  என்பதே மாணவர்களின் பதில். கயல் தவறாது பாடசாலைக்கு சமூகமளிப்பவள், அவள் இல்லாத வகுப்பறையில் மாணவர்கள் வெறுமையை உணர்ந்தனர்.

பாடசாலைக்குச் சென்ற கயல் இன்னும் வரவில்லை என ஏங்கித்தவித்த கயலின் பாட்டி, உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத நிலையில் வருந்திக்கொண்டிருந்தாள். மகளைப்  பற்றி ஏதுமறியாத தந்தை வழமை போல் கசிப்பை ருசித்துக்கொண்டிருந்தான். பக்கத்திலிருந்த குடிமகன்கள் "பாழடஞ்ச கிணத்துக்குள்ள ஒரு பொம்பிளப் பிள்ளேன்ர சடலம் கிடக்குதாம்." தந்தைக்கு கயலின் நினைவு வந்தது. அவள் மதியம் வீட்டில் இல்லாததையும்,மூதாட்டியின் புலம்பலையும் கோர்த்துப் பார்த்தான். வியர்வை வழிந்தோடியது, விரைந்தான் அக்கிணறை நோக்கி. திருவிழாவைக் காண வந்தவர்கள் போல் ஒரு கும்பல். பொலிசாரின் கேள்விக்கணைகள் அங்கு நின்றவர்களை ஆட்டிப்படைத்தன. நெஞ்சு பதைபதைக்க அங்கிருந்த சடலத்தைப் பார்வையிட்டான். கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. கயல்விழி காய்ந்த கருவாடு போல் சுருண்டு கிடந்தாள்.


All Rights Reserved © Saambavi Sivaji   

No comments:

Post a Comment