Thursday, March 28, 2013

யாரிந்தப் பெண்


யாரிந்தப்  பெண் 


வழக்கமான  ரீவி  றிமோட்  வதாட்டத்தில் கவியும் பாலாவும் எழுப்பிய ஒலி வானைத்தொட்டுத் திரும்பிக்கொண்டிருந்த நேரம். இரவு ஏழு மணிக்கான அத்தனை அம்சங்களுடன் அவர்களின் வீடு. வாதாட்டத்தின் தீர்ப்பு சிவகாமியால் வழங்கப்பட்டது. ரிமோட்டிற்கு இரண்டு நாள் விடுமுறை.


 வாசலில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு வெளியில் வந்த சிவகாமியின் முன், நெற்றியில் வியர்வையுடனும், பதற்றத்துடனும், சேலைத் தலைப்பால் வியர்வையைத் துடைத்தபடி, கையில் ஒரு நூதனமான பையுடன், அவசரமாகச் சீவிய தலைமுடி அங்கும் இங்கும் அலைபாய, ஒரு  பெண். சிவகாமியுடன் பணிபுரியும் சகபாடி ஒருவரின் சகோதரி.


 "ரீச்சர்  இண்டைக்கு இங்க தங்கலமோ? வீட்டை போகேலாது நாளைக்குக் காலமை போயிடுவன்."


 சிவகாமியின் முகத்தில் கேள்விக்குறி இருப்பினும் சுதாகரித்துக்கொண்டு "வாங்கோ மிஸ்". அப்பெண்ணை உள்ளே அழைத்துச் சென்று அமரச்செய்துவிட்டு திரும்புகையில் கவியும் பாலாவும் தோ கண்காட்சியைப்  பார்வையிடுவது போல் அப்பெண்ணைப் பார்வையிட்டனர். அவர்களைப் பார்வையால்க் கடிந்துவிட்டு சிவகாமி  " மிஸ் ஏதாவது குடிக்கத் தரட்டுமா?"  "இல்லை ரீச்சர் கொஞ்சம் தண்ணி மட்டும் தங்கோ ".


 தாகத்துடன் தண்ணீரை அருந்திவிட்டு புன்னகையால் தன் நன்றியை சிவகாமிக்குத் தெரிவித்தார் அப்பெண்.


 "மிஸ்  ஏன் வீட்டை போகேலாது ஏதாவது பிரச்சனையோ??" சிவகாமியின் ஆவலின் வெளிப்பாடு.


 அப்பெண்ணின்  பார்வை கவி, பாலாவின் மேல் குவிந்தது. "பிள்ளையள் நிக்கினம் ரீச்சர் நான் உங்களுக்குத் தனியச் சொல்லுறன்"


 "நீங்க இங்க வந்திருக்கிறது வீட்டை தெரியுமோ ?"


 "ஓம் ரீச்சர் சொல்லிப்போட்டுத் தான் வந்தனான்"


 மெல்ல அவ்விடத்தை விட்டு நகர்ந்த சக உதரங்கள் சுவர் மறைவில் நின்று ஒட்டுக்கேட்கும் படலத்தை ஆரம்பித்தனர் 


 அப்பெண்ணின் வார்த்தைகளுக்கான காத்திருப்புக்களும் பரிதவிப்புக்களும் வெகுநேரம் நீடிக்கவில்லை. அவர் பேச ஆரம்பித்தார்.


 "ரீச்சர் வீட்டில துர் தேவதைகளிண்ட அட்டகாசம் தாங்க முடியேல்ல"


 கவி , பாலாவின் முகத்தில் ஒருவித கலக்கம். காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு மேலும் கவனித்தனர். இது சிவகாமியின் பதில்

"அப்பிடியோண்டும் இல்லை மிஸ் நீங்கள் பயப்பிட வேண்டாம்"


 "இல்ல ரீச்சர் உங்களுக்குத் தெரியாது. நான் கண்ணால கண்டனான். எங்களை இருக்க விடுகுதில்லை. போன கிழமை அவர் கிணத்தடியில விழுந்திட்டார். ஒரே துர்ச்சகுனமவே இருக்குது. இண்டைக்கு வீட்டுக்குள்ள போகேலாது. அவர் வெளியால போட்டார் அது தான் நான் இங்க வந்தனான். விளக்குச் செய்யக் குடுத்திருக்கிறன். நாளைக்குக் காலமை கோயில்ல கொண்டே விளக்கு வச்சிட்டுத்தான் வீட்ட போவன். "


 கவி , பாலாவின் முகத்தில் வியர்வை சரளமாக வழிந்தோடியது. பாலா மெல்ல கவியின் காதோரம் "துர் தேவதைகள்  என்டா என்ன????"  பதில் சொல்ல முடியாதவளாய்க்  கவி. பாலாவின் குடைச்சலை ஒருவாறு சமாளித்துக்கொண்டு  சிவகாமியை நோக்கினாள். சிவகாமியின் முகத்தில் இலேசாக பீதியின் சாயல், இருப்பினும் தைரியமாக  “மிஸ் இந்தக் காலத்தில உத எல்லாம் நம்புறீங்களா? பயப்பிடாம இருங்கோ காலமை கதைப்பம்."


 கணவனின் மோட்டார் வண்டிச் சத்தம் கேட்டு, அவ்விடத்தை விட்டு நகர்ந்த சிவகாமி, அப்பெண்ணின் வாயால் வந்தவைகளை அப்படியே கணவனிடம் ஒப்புவித்தாள். அமானுஷ்ய சக்திகளின் பால் எள்ளளவும் நம்பிக்கையில்லாத ஒரு யதார்த்தவாதி சிவகாமியின் கணவன். மனைவியின் ஒப்புவிப்பைப் பொறுமையாகக் கேட்டு, புன்னகையே பதிலாக  " உந்த விசர்க்கதைகளை விட்டிட்டு, அவாவை காலமை வீட்டை அனுப்புற வழியப் பாரும்" தன் பணிகளுக்குச் சென்று விட்டார்.


 யாரிந்தப் புதிரான பெண்? பீதியை மெல்லத் தூண்டிவிட்டு, ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருக்கிறாள். கவி, பாலா அன்றைய இரவுப்பொழுதில் ஒற்றுமையே சிகரங்களாக, வீபூதியை நெற்றி நிறையப் பூசி விட்டு அப்பெண்ணிடமிருந்து தொலை தூரத்தில் அமர்ந்திருந்தனர். புயல் வேகத்தில் வந்து அனைவரையும் கலங்க வைத்துவிட்டு ஆற அமர்ந்திருக்கும் இப்பெண்ணின் நோக்கம் தான் என்ன? சிவகாமியின் மனதில் ஆயிரம் கேள்விகள்.


 அப்புதிரான பெண்ணுடன் அன்றைய இரவுப்பொழுது பயத்துடனும், கலக்கத்துடனும் கழிந்தது.


 மறுநாட்காலை சிவகாமி காலைக்கடமைகளை நிறைவேற்றுவதில் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தாள். அப்பெண் புறப்படத் தயாராகிக்கொண்டிருக்க, கவியும் பாலாவும்  அப்பெண்ணின் செயற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.


 அதிகாலையிலேயே வாசலில் ஒருவர்,  சலிப்புடன் வெளியில் சென்றாள் சிவகாமி. வாசலில் அப்பெண்ணின் கணவன்.


"வாங்கோ மிஸ் வெளிக்கிட்டிட்டா"  சிவகாமி புன்முறுவலுடன்.


  தயக்கத்துடன்  சிவகாமியை நெருங்கிய அந்நபர்


 "ரீச்சர் அவாக்கு மூளை சுகமில்லை. இப்ப மருந்துகளையும் செரியாப் போடுறேல்ல. நேற்றுத் தெல்லிப்பளைக்குக் கூட்டிக் கொண்டு போக இருந்தனாங்கள். அவா ஆரிட்டையும் சொல்லாம வெளிக்கிட்டிட்டா. நேற்று ராத்திரி முழுக்கத் தேடின்னா ங்கள். காலமை ஒருத்தர் உங்கட வீட்டுப் பக்கமா போனதைக் கண்டதாச் சொன்னவர். அதுதான் வந்தனான். சிவகாமி விழி பிதுங்கி நின்றாள்... 

All Rights Reserved © Saambavi Sivaji   

2 comments:

  1. Anonymous3/29/2013

    wow..unexpected climax..welldone saambu!
    @ thivz @

    ReplyDelete