Saturday, January 18, 2014

கணிதவியலாளா்

யாழ்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட அழகு சுப்ரமணியம் எனும் பிரபல  எழுத்தாளரால் 1950 காலப்பகுதிகளில் எழுதப்பட்ட “The Mathematician” எனும் ஆங்கில சிறுகதையை தமிழாக்கம்  செய்யும் ஒரு முயற்சி. இங்கு பிரசுரிக்கப்படுவது எனது தமிழாக்கத்தின் சுருங்கிய வடிவம்.




அது ஒரு நிலவில் ஒளிர்ந்த இரவு. அந்நகரத்தின் தெருக்களில் அங்குமிங்குமாக மக்கள் கூட்டம். அவர்களுள் புதிதாக திருமணமான ஒரு தம்பதியினர். அவர்கள் இருவரும் அருகருகே செல்லவில்லை. அக்கணவன் மனைவியை விட ஒரு அடி முன்னாடி நடக்கிறான். அவர்களின் உரையாடல் சற்று முறைசார் ஒழுங்கில் நடைபெறுகிறது. இருவரும் படித்தவர்கள் போன்று காட்சி தருகின்றனர்.


அவர்களுக்கிடையிலான அந்த இடைவெளி தவிர்க்கக் கூடியதாக இருப்பினும் அக்கணவன் முன்னே செல்வதற்கு முன்னுரிமை கொடுப்பவன் போல தோற்றமளித்தான்.

அப்பெண்ணினுடைய கணவன் சந்திரம் உயர்தரமாணவர்களுக்கு கணிதம் கற்பிக்கிறார். அவருடைய கல்விசார் தகமைகள் ஒரு விரிவுரையாளராக இருப்பதற்கு தகுதி வாய்ந்தவை.  சந்திரமின் நோக்கம் கூட அதுவாகவே இருந்தது.

சுபத்ரா, சந்திரமின் மனைவி திடீரென்று எதையோ நினைவுகூர்வது போல் தெரிந்தது.
“என்ன யோசிக்கிறாய்?” சந்திரம் சுபத்ராவிடம் கேட்டார்.

“நான் Tamarind பாடசாலையில களித்த நாட்களைப் பற்றி யோசிக்கிறேன். அங்க பாருங்கோ அந்த சுவர்களுக்கு மேல ஒரு பில்டிங் தெரியுதெல்லோ”

“ஓம்”

“அங்க தான் நான் படிச்சனான்”

“தரகர் சொன்னவர் நீ படிச்ச பொம்பிளை எண்டு. நீ கனக்க படிச்சனியோ ?”

“நான் Third Form வரையும் படிச்சனான். Junior Cambridge Examination எல்லாம் பாஸ் பண்ண வேண்டும் எண்டு நினைச்சனான். ஆனால் அதுக்கிடையில  கல்யாணம் பண்ணி வச்சிட்டினம்”

“உனக்கு ஏமாற்றமா இருக்கேல்லையோ?”

“இல்லை, இல்லை”   சந்திர ஒளியில் அவளது பற்கள் பளிச்சிட சிரித்தாள் சுபத்ரா

“நீ கணக்கும் படிச்சனியா?”

“ஓம் நான் அட்சர கணிதம், கேத்திர  கணிதம் எல்லாம் படிச்சனான்.”

“சரி சமாந்தரக்கோடுகள் எண்டா  என்ன?”

“சமாந்தரக் கோடுகள் ஒன்றை ஒன்று ஒருபோதும் சந்திக்காது”

“இது மிகச் சரியான டெபினிஷன் இல்லை. நீ சொல்லுறது

அடிப்படை கணிதம்  படிச்சாக்கள்  சொல்லுற மாதிரி இருக்கு”

“அப்ப நீங்கள் எப்பிடி சொல்லுவீங்கள்?”

“சமந்தரக்கோடுகள் ஒன்றை ஒன்று முடிவிலியில் சந்திக்கும். சுபத்ரா நான் ஒரு கணித மேதை தெரியுமா?”

“ஓம் நீங்கள் நல்லாப் படிச்ச ஆள்” சுபத்ராவின் பதில்

“நீயும் படிசிருக்கிறாய் ஆனால் கனக்க இல்லை. பொம்பிளையளுக்கு கனக்கப் படிப்பு தேவை இல்லை.”

மீண்டும் சுபத்ரா புன்னகைத்தாள். அவளுடைய வெள்ளைப் பற்கள் சந்திரனை விடப் பிரகாசமாக இருந்தன. அவர்கள் தொடர்ந்து நடந்தனர். சந்திரமின் பின்னால் சுபத்ரா.
     
தொடர்ந்த வருடங்களில் சந்திரமின் நாட்டம் முழுவதுமாக கணிதத்திலேயே காணப்பட்டது. சுபத்ரா சந்திரமிடம்  தன்னுடைய விருப்பங்களை வார்த்தைகளாலோஅல்லது செயல்களாலோ ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. ஒரு மனைவி எவ்வாறு இருக்க வேண்டும்  என சமூகம் வகுத்து வைத்த விதிமுறைகளைத் தவறாது பின்பற்றினாள். சந்திரம் திருமண வாழ்க்கையை முற்றாக உதாசீனம் செய்தார் என்றும் கூற முடியாது. ஏனெனில் தொடர்ச்சியான இடைவெளிகளில் சுபத்ரா குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.

சந்திரம் தான் ஒரு கணித மேதை எனும் கூற்றிற்கு சுபத்ராவை அடி பணிய வைத்தார். சந்திரமின் வாழ்க்கையை கணிதத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்க வேண்டும் மாறாக சாதாரண மனிதர்களின் சமூக வாழ்க்கையோடு அல்ல.

சந்திரம் நீண்ட தூரம் நடை பயணம் செல்வது வழக்கம். அவர் வீடு திரும்பும்போது சுபத்ரா நீங்கள் உங்களுடைய நண்பர்கள் யாரையாவது சந்தித்தீர்களா எனக் கேட்டால் அவருடைய பதில் "இல்லை நான் கணிதத்தின் பாதையில் நடந்து கொண்டிருந்தேன்." என்பதாக இருக்கும்.

சந்திரம் தன்னுடைய அயலவர், உறவினர்களுடன் அடிக்கடி சண்டையிடுவார். ஏனையோரில் எப்போதும் பிழை கண்டு பிடிப்பார். Calculus இல் காணப்படும் கடினமான கணித்தல்களைக் கூட இலகுவாக செய்து முடிக்கும் சந்திரம், பலசரக்கு கடையில் பொருட்கள் வாங்கும் போது மட்டும் கூட்டல் பிழை விடுவார்.  தன்னுடைய குழந்தைகளை முற்றாக நிராகரித்தார். 

தன்னுடைய கணவன் ஒரு நியூட்டனாகவோ ராமானுஜமாகவோ வருவார். ஆகவே அவருடைய தவறுகளை சற்றே விலக்கி அவரை ஒரு கணித மேதையாக மட்டும் நோக்குமாறு சுபத்ரா உறவினர்களிடமும் நண்பர்களிடமும் வேண்டிக்கொள்வாள். சந்திரமிற்கேற்றாற்போல் தன்னை மாற்றிக் கொண்டாள்.

சந்திரம் ஒரு அசாதாரண மனிதரைப் போல் தோற்றமளித்தார். ஒன்றுக்கொன்று முரணான காலணிகளை அணிவார். நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விட்டு அவர்கள் முற்றுகையிடும் நேரம் கணிதத்தில் நீராடச் சென்று விடுவார்.கடுமையான மழை நாட்களில் நீண்ட தூரம் நடந்து செல்வார். கடினமான கணக்குகளை  இலகுவாகக் கணிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்தார். சந்திரமின் குறிக்கோளும் நிறைவேறியது. இவரது கணிதப் புலமைக்கு உலகளாவிக ரீதியில் விருதும் கிடைத்தது. அதன் விளைவாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

சந்திரமின் கணித வாழ்க்கைக்கு பல்கலைக்கழகம் இடம் கொடுக்கவில்லை. ஏனைய பேராசிரியர்களைப் பார்க்க சந்திரமுக்குப் பொறாமையாக இருந்தது. அனைவரும் தங்களுடைய துறை தவிர்ந்த வேறு துறைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகக்  காணப்பட்டனர்.

ஒரு நாள் சந்திரம் தனது மாணவர்களுக்கு தான் வைத்த பயிற்சிப்  பரீட்சையை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அனைத்து மாணவர்களும் தீவிரமாக பரீட்சை எழுதிக் கொண்டிருந்தனர். ஒரு மாணவனின் விடைத்தாள் மட்டும் வெறுமையாகக் காணப்பட்டது. சந்திரம் அம்மாணவனை நெருங்கினார். அவனுடைய விடைத்தாளில் இரண்டு வரிகள் மட்டுமே காணப்பட்டன. அம்மாணவனின் கையை விடைத்தாளிளிருந்து பலவந்தமாக விலக்கி முதலாவது வரியை வாசித்தார்.

சந்திரம் + கணிதம் = முடிவிலி

சந்திரமின் முகம் என்றுமில்லாதவாறு பிரகாசித்தது. மண்டபத்தில் மகிழ்ச்சியாக நடந்தார். “நியூட்டன், ராமானுஜம், சந்திரம், சந்திரம் நியூட்டன், ராமானுஜம்” சந்திரம் மீண்டும் மீண்டும் இவ்வார்த்தைகளை மனதார உச்சரித்தார்.

திடீரென்று ஏதோ சிந்தனை வயப்பட்டவர் போல அம்மாணவனை நோக்கி விரைந்தார். இரண்டாவது வரியைக் காண்பிக்குமாறு அவனை வற்புறுத்தினார். இரண்டாவது வரியை வாசித்தார்.

சந்திரம் - கணிதம் = பூச்சியம்

சந்திரமின் முகம் இருண்டது. தனது உடமைகள் அனைத்தையும் இழந்தவா் போல் பல்கலைக்கழகத்தை விட்டு நடந்தார்.

“சுபத்ரா எங்க இருக்கிறாய்?” சந்திரனின் அலறல்

“இங்க உங்களுக்குப் பின்னால நிக்கிறன்“

சுபத்ராவை வெளியே இழுத்து வந்தார் சந்திரம்

 உரத்த குரலில் “சந்திரம் + கணிதம் =  என்ன?” என்று கேட்டார்

செய்வதறியாது சுபத்ரா. முடிவிலியைப் பற்றி அவள் அறிந்திருந்தாலும் தன்னுடைய அறிவிற்கேற்றாற் போல் விளக்கமளித்தாள்.

“சந்திரம் + கணிதம் எண்டால் கடலையும் விடப் பெரியது.”

“அருமை நீ நல்ல வடிவா விளக்கம் சொல்லுறாய்” சுபத்ராவை அன்பாக கட்டி அணைத்தார் சந்திரம்.

கணவனாக இருந்தாலும் கூட பொது இடங்களில் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடாது எனும் கோட்பாட்டின் கீழ் வளர்த்தெடுக்கப்பட்ட சுபத்ரா சந்திரமின் கரங்களை விலக்கினாள். இவர் ஏன் இண்டைக்கு வித்தியாசமா இருக்கிறார்? இல்ல இல்ல இவர் ஒரு மேதை அது தான் அப்பிடி இருக்கிறார். சுபத்ரா தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

“சுபத்ரா”

“ஓம் ப்ரொபெசர்”

“இப்ப சொல்லு  சந்திரம் – கணிதம்= என்ன?”

“அது சரியான ஈசி நீங்க கணிதம் இல்லாட்டி ஒண்டுமே இல்லை”

சந்திரம் சுபத்ராவை ஆவேசமான வார்த்தைகளால்  திட்டினார். இரு கைகளையும் மேலே உயர்த்தி உரத்த தொனியில் சத்தமிட ஆரம்பித்தார். அவர்கள் இருவரையும் சுற்றி ஒரு பெரிய கூட்டம். சிலர் சந்திரம் பைத்தியமாகி விட்டார் எனக் கூறினார். வேறு சிலர் இது மேதைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்சனை சில நொடிகளில் சரியாகி விடும் என விவாதித்தனர். ஏனையோர் சந்திரம் கொஸ்மிக் நடனம் ஆடுகிறார் என தீவிரமாக நம்பினார்.

சந்திரம் கூட்டத்தைப் பிய்த்துக்கொண்டு பல்கலைக்கழக துணைவேந்தரின்  வீட்டை நோக்கி ஓடினார். தன்னுடைய இரு கேள்விகளுக்கும் பதில் சொல்லுமாறு அவரை உலுப்பினார். பலநிமிட பிரயத்தனத்தின் பிற்பாடு துணைவேந்தர் உதவியாட்களின் அனுசரணையுடன் சந்திரமை வாகனத்தில் ஏற்றி மனநல மருத்துவமனைக்கு விரைந்தார்.

சுபத்ராவை சில பெண்கள் கூட்டிச் செல்வதை வாகனத்தினுாடாக அவதானித்த சந்திரம் சுபத்ராவை நோக்கி அலறினார்.

“சந்திரம் நீங்க சுபத்ராவை இப்ப பாக்கேலாது” கண்டிப்பான குரலில் துணைவேந்தா்.

“சரி ஒரு பிரச்சினையும் இல்லை. நான் அவளை முடிவிலியில் சந்திக்கிறேன்.”
                     ***
All Rights Reserved © Saambavi Sivaji   

  

  


Sunday, December 29, 2013

கூலிக்கு மாரடிப்போர்

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆங்கில எழுத்தாளரான அழகு சுப்ரமணியம் என்பவரால் 1964ல் வெளிவந்த ”The Professional Mourners” எனும் ஆங்கில சிறுகதையைத் தமிழாக்கும் முயற்சி.

கூலிக்கு மாரடிப்போர்

ஒரு  சனிக்கிழமை இரவு எனது ஆச்சியின் உயிர் பிரிந்த வேளை நான் எனது தம்பி தங்கையுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்தேன். மறுநாட்காலை ஆச்சியின் வீட்டிலிருந்து வந்த அழுகை ஓலத்துடனும் பறைமேள முழக்கத்துடனும் விழித்தோம். அவசரமாக உடையை மாற்றிக்கொண்டு ஆச்சியின் வீட்டை விரைந்தோம். அங்கு ஒரு பெரிய கூட்டம்.எல்லைவேலிக்கும் வெளி விறாந்தைக்கும் இடையில் உள்ள இடைவெளியைச் சனக்கூட்டம் நிரைப்படுத்தியிருந்தது. 

அந்தக் கூட்டத்திற்குள் ஒருவாறு நுழைந்து வீட்டின் நடுப்பகுதியை அடைந்துவிட்டோம்.  எமது கண்கள் அம்மாவைத் தேடின. நாங்கள் சந்திக்கும் முதல் மரண வீடு இது என்பதால் சற்றுப் பயமாகவே இருந்தது. நாங்கள் வீட்டை அடைந்ததும் அடையாததுமாக "நிகழ்வின் தலைவர்" இன் சத்தம் காதில் விழுந்தது. மரண நிகழ்வின் அனைத்து ஏற்பாடுகளிற்கும் அவர் தலைமை வகித்தார். அவர் எங்களுடைய மாமா, ஒரு சிறு பாடசாலையில் ஆசிரியர், அதுமட்டுமல்ல கொஞ்சம் மூளைக்கோளாறுள்ளவர்.  அவர் எப்பொழுதும் உரத்த தொனியில் விரைவாகப் பேசுவார். அவர் கோபமாக இருந்தால் முழுக்கிராமமும் கேட்கும் அளவிற்கு உச்சஸ்தாயியில் கத்துவார். இன்றும் கூட அவர் மிகுந்த கோபமாக உள்ளார் ஏனெனில் கூலிக்கு மாரடிப்போர் இன்னும் வந்து சேரவில்லை.

"நானே போய் அதுகளைக் கூட்டிக்கொண்டு வாறன்."  எனக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார். கூலிக்கு மாரடிப்போரைப் பற்றி நான் பல கதைகளைக் கேள்விப்பட்டுள்ளேன், ஆவலின் மிகுதியால் எனது தம்பி, தங்கையை விடுத்து அவர் பின்னால் ஓடினேன் . வீடுகளோ இரைச்சலோ அற்ற மணல் வீதிகளினுாடாகவும் ஒடுங்கிய  பாதைகளினுாடாகவும் நடந்தோம்.  இருப்பினும் பாம்புகள் சீறும் சத்தமும் நரிகள் ஊளையிடும் சத்தமும் கேட்பதாய் நான் உணர்ந்தேன்.   "பாம்புகள் உன்னைக் கடிக்காது. பயப்பிட வேண்டாம்" மாமாவின் திடப்படுத்தல். கடற்கரையில் நிரையாக குடிசைகள் உள்ள பகுதியை வந்தடைந்தோம். ஆங்காங்கே மீனவர்கள் சிலர் துணைவியரின் உதவியுடன் வலைகளை சரி செய்துகொண்டிருந்தனர் . வேறு சிலர் கட்டுமரத்தைக் கடலில் தள்ளிக்கொண்டிருந்தனர். "எல்லாத்தையும் நிப்பாட்டுங்கோ, மூளைகெட்ட பரதேசிகளே" மாமா பலத்த சத்தத்துடன் அவர்களிடம் விரைந்தார். 

"என்ர மாமீன்ர செத்தவீடு நடக்குதெண்டு உங்களுக்குத் தெரியாதோ கீழ்ப்புத்திக்காரங்களே, அங்க நிக்க வேண்டிய ஆக்கள் ஏன்  இங்க நிக்கிறியள்?"

"எங்களுக்கு செத்த வீட்டைப் பற்றி தெரியாது ஐயா" எனக் கூறிக் கொண்டு மீன்பிடி வலைகளை விட்டு விலகினர். "நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில அங்க இருப்பம்" கரங்களைக் கூப்பியவாறு மண்டியிட்டனர்.  அவர்களைக் கடிந்த வண்ணம் கூலிக்கு மாரடிப்போரைத் தேடி மாமா விரைந்தார். "அங்க தான் இந்தக் கேடுகெட்ட பொம்பிளையள் இருக்கிறதுகள்" எனக் கூறி நாங்கள் முதலில் பார்த்த குடில்களை விடச் சிறிய குடில்களைச் சுட்டிக் காட்டினார்.
குடிலுக்கு வெளியே நின்று உள்ளிருப்பவர்களை அழைத்தார். கரடுமுரடான சேலைகளை அணிந்த இரு பெண்கள் வெளியே வந்தனர்.அவர்கள் அணிந்த சேலைகள் தோள்ப்பட்டையையோ, தலைப்பகுதியையோ மறைக்கவில்லை. மணிக்கட்டிலிருந்து முழங்கைவரைக் காப்புக்களை அணிந்திருந்தனர். அவர்கள் நடக்கும் போது காற்சலங்கைகள் கிலுங்கின. மாமா அவர்களைப் பார்த்துக் கத்தினார்.

 "நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பின்னான் என்ர  மாமீன்ர செத்தவீடு இண்டைக்கு நடக்கப்போகுதெண்டு இவ்வளவு நேரமாகியும் ஏன் இன்னும் வரேல்ல?"   
 
"நாங்கள் வாறத்துக்குத்தான் வெளிக்கிட்டுக்கொண்டு இருந்தனாங்கள் ஐயா தயவு செய்து எங்களை மன்னியுங்கோ" அவர்களில் ஒரு பெண் கூறினாள்.

"மிச்சாக்கள் எங்க?" நிகழ்வின் தலைவரின் உறுமல்

"பக்கத்தில ரெண்டு சகோதரிகள் தான் இருக்கினம் மிச்சாக்கள் எங்கை எண்டு எங்களுக்குத் தெரியாதையா. ஆனால் இவையும் கூட இண்டைக்கு வரேலாது அவேன்ர  அம்மா காலமை செத்துப்போயிற்றா”

"இது என்ன முட்டாள்தனம்! எங்க அந்தப் பொம்பிளையள் இருக்கிறதுகள்?" அவர் வலிந்து வற்புறுத்தினார்.

"இங்க இருந்து கன தூரத்தில இல்ல ஐயா"

"என்ன அங்க கூட்டிக்கொண்டு போ"

அந்த இரு பெண்களும் முன்னால் செல்ல நாங்கள் பின் தொடர்ந்தோம். இவர்கள் ஒரு குடிலின் வெளியே நின்று இரு சகோதரிகளையும் அழைத்தனர். தமது மார்பகங்களின் மீது வழுக்கி இருந்த சேலைகளைக் கட்டியபடி அவர்கள் வெளிப்பட்டனர்.

“சிறிது நேரம் அவ்விடத்திலேயே நின்று தயங்கிய பின்னர் நிகழ்வின் தலைவரின் காலடியில் விழுந்தனர்.

 "இண்டைக்கு மட்டும் எங்களை மன்னியுங்கோ ஐயா எங்கட அம்மா இண்டைக்கு காலமை மோசம்போய்ற்றா. நாங்கள் சரியான கவலையாய் இருக்கிறம் மற்றாக்களிண்ட செத்தவீட்டை வந்து அழுகிற நிலமையில நாங்கள் இல்லை.

"அவமரியாதை" தலைவர் சத்தமிட்டார்.  என்ர மாமீன்ர மரணச்சடங்கில அழுகிறத்துக்கு ரெண்டு பேர் பத்தாது. அவா யார் எண்டு தெரியும்தானே.
"அவையள விடுங்கோ ஐயா" இடைத்தரகராக பாத்திரமேற்ற பெண் கூறினாள்.

 "இது நியாயமில்லை . அவையள் தங்கட அம்மாண்ட செத்தவீட்டை உண்மையா அழுறத விட்டிட்டு உங்கட வீட்டை வந்து நடிக்கேலாது.”
என்னுடைய உறவினரின் உதடுகள் நடுங்கியதையும், கண்கள் செந்நிறமானதையும் அவதானித்தேன். சற்றுமுன் இடைத்தரகராகத் தொழிற்பட்ட பெண் நிலத்தை நோக்கினாள். நான் பரிதாபமாகத் தலையசைத்தேன். தலைவரின் சினம் இப்போது மணல் அணைகளினுாடு பாயும் நீர் போல என்னை நோக்கித் திரும்பியது.

"நீ என்ன முட்டாளா?" தலைவர் என்னைத் திட்டினார். "இதைப் பற்றி எல்லாம் உனக்கு என்ன தெரியும்? உன்ர அப்பாண்ட வழக்கறிஞ நண்பர்கள், உயர் நீதிமன்ற நீதிபதி, பொலிஸ் நீதவான் எல்லாரும் வருகினம். எங்கட செத்தவீட்டில மாரடிக்கிறாக்கள் கனக்கப்பேர் இல்லாட்டி எங்களைப் பற்றி என்ன நினைப்பினம்? "

முழந்தாளிட்ட நிலையிலிருந்த சகோதரிகள் மீண்டும் இறைஞ்சினர். "நாங்கள் வேணுமெண்டு அப்பிடிச் சொல்லேல்ல ஐயா" அவர்களில் ஒருத்தி கூறினாள். "இந்த முறை மட்டும் எங்கள விடுங்கோ. உங்கட வீட்டை இன்னொரு மரணவீடு நடக்கேக்கை எங்கட தொண்டை காயுறவரைக்கும் குளறுவம்!"

"உது என்ன தடிப்பு?" மாமா மீண்டும் சத்தமிட்டார். அப்ப என்ர வீட்டை இன்னொரு செத்தவீடு நடக்கவேணுமெண்டு ஆசைப்படுறாய் என்ன? நான் சாக வேணும் எண்டு தான் நீ நினைப்பாய். கேடுகெட்ட பிராணியள். நீதிபதியிட்ட சொல்லி  நல்ல அடி வங்கித் தரவேணும் உந்த மாதிரிக் கதைக்கிறத்துக்கு" எனக் கூறி அவர்களது சேலையைப் பிடித்து இருவரையும் தற தற வென தரையில் இழுத்தபடி சிறிது தூரம் நடந்தார்.
"தயவு செய்து உங்கட கையை எடுங்கோ, நாங்கள் வாறம்." இருவரும் புலம்பினர்.

நிகழ்வின் தலைவர் அவர்களை விடுவித்துவிட்டு முன்னே நடந்தார். நாங்கள் அவரைப் பின்தொடா்ந்தோம். ஆச்சியின் வீட்டை அடைந்தவுடன் மாரடிப்போர் கைகளை மேலே உயர்த்தி தலைமுடியைத் தளர்த்தி அழுதனர். மரண வீட்டின் ஏனைய பெண் உறவினர் மற்றும் நண்பர்கள் இரண்டு, மூன்று பேர் கொண்ட குழுக்களாக ஒவ்வொருவர் கழுத்திலும் மற்றையவரின் தலையை சாய்த்ததபடி அமர்ந்திருந்தனர். இவர்களுடன் கூலிக்கு மாரடிப்போர் இணைந்தனர். ஆனால் மற்றைய பெண்களிலிருந்து சற்று தொலைவில் அமர்ந்தனர். கைகளை வானை நோக்கி உயர்த்தி, தமது தலையையும் மாரையும் கைகளால்  அடித்தவண்ணம் புலம்பியபடி அழுதனர். அவர்கள் அழும்போது ஆச்சியியைப் போற்றிப் பல வார்த்தைகளைக் கூறினர். சிவபெருமானின் அருளால்த் தான் ஆச்சி அவருடைய செல்லப் பேரப்பிள்ளை மலேசியாவில இருந்து வரும் வரை உயிரோடிருந்தார் எனக் கூட்டத்தில் கவலையுடன் அழுதுகொண்டிருந்த பெண்கள் கூறியது மாரடிப்போரின் காதில் விழுந்தது. தமக்கு ஒரு புது ஸ்லோகம் கிடைத்ததை இட்டு அவர்கள் நிலத்திலிருந்து எழுந்தனர், தலையைக் குமைத்து, கைகளைக் குறுக்காகக் கட்டி தோள்ப்பட்டைகளை அடித்தவாறு அழுதனர்.

"உங்கட செல்லப்பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ ஓ ஓ எங்கட பாசமுள்ள அம்மாவே...."

"உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ அம்மாவே"

இதே நேரத்தில் தன்னுடைய கைங்கரியத்தைப் பற்றி நிகழ்வின் தலைவர் தனது நண்பர்களுக்குப் பறைசாற்றிக்கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தது போலல்லாது அனைவரும் அவரது கொடூரமான செயலைக்கேட்டுத் திகைப்படைந்தனர். நிகழ்வின் தலைவரின் மனிதாபிமானமற்ற செயலிற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தலைவரை மாரடிப்போரிடம் மன்னிப்புக் கேட்கும்படி செய்தனர். நிகழ்விற்கு வந்திருந்தவர்களில் பலர் தாயை இழந்த சகோதரிகளிற்கு தமது துக்கத்தைத் தெரிவித்தனர். சகோதரிகளுக்கு நேர்ந்த அவலத்துக்குப் பணம் தருவதாக வாக்குறுதியளித்த அப்பா, அவர்களை வீடு செல்லுமாறு வலிந்தார்.

நிகழ்வின் தலைவர் தண்டிக்கப்பட்டார். மாரடிப்போர் மரணச்சடங்கு முடியும் வரை தமது பங்களிப்பை வழங்குவதாகக் கூறினர். நிகழ்வின் தலைவரின் செயல் அனைவராலும் வெகுவாக விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனைச் சரி செய்வதற்காக முன்னைவிட அதிகமாக அனைத்து வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பறைமேளம் அடிப்போரைக் கடிந்தார். ஏனெனில் அவர்களால் மாரடிப்போரின் அழுகை ஒலிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

பின்னர் சடங்கிற்குத் தேவையான அரிசி, சாம்பிராணி மற்றும் இதர இத்தியாதிகளை பூதவுடலுக்கு அண்மையில்க் கொண்டு வந்து வைத்தார். மாரடிப்போரை அழைத்து வருவதற்கான அவரது முயற்ச்சியின் பயனாக ஏற்பட்ட களைப்பினால், திடீரென மயக்கமுற்றுத்  தரையைத் தழுவினார். கூட்டத்திலிருந்த சிலர் கூச்சலிட்டனர், ஏனையோர் தலைவருக்கு உதவிக்கு ஓடினர். அவரை ஒரு மூலையில் அமர்த்தி தண்ணீரால் முகத்தை அலம்பினர். ஒரு சில நிமிடங்களில் தலைவர் தெளிவடைந்தார். தான் விரைவில் சரியாகி விடுவேன் எனக் கூறினார். தலைவரின் நண்பர்கள் மரணச்சடங்கை நடாத்துவதற்க்குப் போதிய ஆட்கள் இருப்பதனால் தலைவரை  ஓய்வெடுக்குமாறு கூறினர். ஓய்விலிருந்த சகோதரிகள் இப்போது தமது கீச்சிடும் ஒலியினால் இடத்தை நிரப்பினர். தலைவரைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாது புலம்பினர். நான்கு மாரடிக்கும் பெண்களும்  ஒன்றாக இணைந்தனர். அவர்களது உடல்கள் காற்றில் ஆடும் நாணல் போல் அசைந்தாடின. அனைவரும் ஒரே பல்லவியில்ப் புலம்பினர்.

"ஏழைகள் எல்லாரும் நீங்கள் இல்லாம தவிக்கப்போகினமே! ஓ நீங்கள் கொடைவள்ளலேல்லோ ஓ..... ஓ…. ஓ.....”

"கொண்டாட்டங்களில ஆர் எங்களுக்குச் சாப்பாடு தரப்போகினம்?"

""உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ எங்கட பாசமான அம்மா...."

"உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ அம்மாவே"

சிறிது நேரத்தில் அவர்களது புலம்பல் மெதுவாகத் தேய்ந்துகொண்டு சென்றது. ஆனால் ஐயர் வந்தவுடன் மீண்டும் புலம்பல் உச்சக்கட்டத்தை எட்டியது. ஐயா் தன்னுடைய கிரியைகளைச் செய்யும் வரை அமைதி நிலவியது. அடிக்கடி உச்சரிக்கப்படும் 'பேரப்பிள்ளை' என்ற வார்த்தை ஐயரின் ஆவலை அதிகப்படுத்தியது. பின் அவருக்கும் தம்புவைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. ஐயர் தம்புவைப் பூதவுடலுக்கு அருகில் அழைத்து ஊதுவர்த்தி ஏற்றிப் பிரார்த்தனை செய்யுமாறு கூறினார். இவ்வளவு நேரமும் அடக்கிவைத்திருந்த கவலை கண்ணீராய்த் தம்புவின் கண்களிலிருந்து வழிந்தது.

"எனக்காக இவ்வளவு நாளும் பாத்துக்கொண்டு இருந்தீங்களே" தம்பு அழுதான்.

"விதி என்னை இவ்வளவு நாளும் உங்களிட்டக் கொண்டுவந்து சேர்க்கேல்லை. இப்ப நான் வந்த பிறகு நீங்கள் படுத்தபடுக்கையாயீட்டீங்களே. உங்களோட ஒருக்காக் கூட என்னால கதைக்க முடியேல்ல"

மாரடிப்போரின் புலம்பலுக்கு இன்னுமொரு ஸ்லோகம் கிடைத்தது.
"ஏன் இவ்வளவு நாளும் பேசாம இருந்தனீங்கள் ஒரு பெரிய வழக்கறிஞரிண்ட அம்மாவே.....”

"உங்கட பட்சமுள்ள சொந்தத்தோட ஒருக்காக்  கதைக்கமாட்டியளோ அம்மாவே....."

"மீன் போல இருக்கிற உங்கட கண்ணைத் திறவுங்கோ...."

"மதுரை மீனாட்சி அம்மனிண்ட கண்ணெல்லோ உங்களிண்ட கண்"

"உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ ஓ ஓ எங்கட பாசமான அம்மாவே...."

"உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ அம்மாவே"

All Rights Reserved © Saambavi Sivaji