Tuesday, November 27, 2012

ஆங்கில அம்மணி


ஆங்கில அம்மணி

அன்றொருநாள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் பேரூந்தொன்றின் ஓா் ஆசனத்தில் நான். யன்னல் வழியாக நடப்பவற்றை இரசித்துக்கொண்டிருந்தேன். அனேகமாக பேரூந்தின் அனைத்து இருக்கைகளுமே நிரப்பப்பட்டிருந்தன. எதற்காக இந்த தாமதம் என்ற கேள்வி என் மனதில். சற்று நேரத்தில் ஓர் அம்மணி தனது seat number ஐ தேடியவாறு வந்துகொண்டிருந்தார். எனக்குப்பின்னே அவரின் இருப்பிடம். பேரூந்து புறப்பட தாமதித்தமைக்கான காரணத்தை அறிந்து கொண்டேன்.



அம்மணி திடீரென எழுந்து நடத்துனரிடம் ஏதோ முணுமுணுத்துவிட்டு வந்தார். மறுகணமே AC கூட்டப்பட்டது. இன்று எனக்கு விறைப்புவலி ஏற்படப்போவது திண்ணம் என எண்ணினேன். அம்மணி என்ன எஸ்கிமோவா் இனத்தைச் சேர்ந்தவரோ? இல்லை இல்லை அவர் கனடாவிலிருந்து வருகிறாராம். குளிரில்லாமல் நானில்லை என வாழ்ந்தவராம். ஆனால் பூர்வீகம் நம்நாடு.

...


நடத்துனரின் இந்த திடீர் நடவடிக்கைக்கு பேரூந்திலிருந்த பெரும்பாலானவா்களின் எதிர்ப்புக் கிளம்பவே AC மறுபடியும் பழைய நிலைக்கு.



ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்த என்னை அம்மணியின் குரல் ஈர்த்தது. அவர் யாருடனோ phone ல் பேசுகிறார். தமிழிலல்ல ஆங்கிலத்தில். எனது முழுக்கவனத்தையும் அவரது உரையாடலில் செலுத்தினேன். பேரூந்தில் அம்மணியின் குரலைத்தவிர வேறெதுவும் கேட்கவில்லை. அப்போது தான் உணர்ந்தேன் அங்கு இருப்பவர்கள் அனைவரும் என்னைப்போல் விடுப்பு பிரியா்கள் என. எல்லோரும் அம்மணியின் உரையாடலைக் கூர்ந்து கவனிக்கின்றனர். அம்மணி பேசுவது ஆங்கிலத்தில் ஆனால் அவருடன் மறுபுறத்தில் phone ல் பேசுபவர் தமிழில் பேசுவது அனைவருக்கும் தெட்டத்தெளிவாகக் கேட்கின்றது. ஏன் அம்மணி ஆங்கிலத்தில் பேசுகிறார்? (இதுக்குப் பேர் தான் scene போடுறதா?)



அம்மணியின் எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் அற்ற உரையாடலைக் கேட்க சுவையாகத்தான் இருந்தது. கேட்டபடியே துாங்கிவிட்டேன்.



திடீரென்று நான் விழித்துப்பார்த்த பொழுது பேரூந்து ஓா் இடத்தில் தரிக்கப்பட்டிருந்தது. எல்லோரும் இருக்கைகளில் அமர்ந்து மீண்டும் பேரூந்து புறப்படத் தயாரான நேரம் முன்று வெள்ளைக்காரர்கள் எங்களுடைய நடத்துனரை அணுகி ஏதோ கேட்டார்கள். அவர்களுடைய ஆங்கில உரையாடலைப் புரிந்து கொள்ள முடியாத நடத்துனா் அரைகுறை ஆங்கிலத்தில் இவ்வளவு நேரமாக build up காட்டிய அம்மணியை உதவிக்கு அழைத்தார். அம்மணியின் முகமாற்றத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ‘இவயோடயெல்லாம் வந்து கதைக்கேலாது ‘ என்று சற்றுக் காட்டமாகவே கூறிவிட்டு ஒரேயடியாக நித்திரையில் ஆழ்ந்தவர் போல் பாசாங்கு பண்ணி அப்படியே அடங்கிவிட்டார்.



இவ்வளவு நேரமும் அமைதியாக அடுத்த ஆசனத்தில் அமர்ந்திருந்த ஒரு வயதானவா் விழிபிதுங்கி நின்ற நடத்துனரிற்கு உதவிக்குச் சென்று நிலமையை சமாளித்தார்.



அதற்குப்பின்னர் பேரூந்து நிசப்தத்துடன் பயணத்தைத் தொடர்ந்தது



குறிப்பு - பல மொழிகளை அறிந்திருத்தல் உலகத்தில் மிக அவசியமான ஒன்று ஆனால் இடம் பொருள் ஏவல் அறிந்து அவற்றைப் பாவிப்பதே மொழியறிவின் பூரணத்துவமாகும்.

No comments:

Post a Comment